/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ததும்பும் அமராவதி! இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி; பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்
/
ததும்பும் அமராவதி! இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி; பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்
ததும்பும் அமராவதி! இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி; பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்
ததும்பும் அமராவதி! இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி; பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 09:29 PM

உடுமலை, : உடுமலை அமராவதி அணை ததும்பிய நிலையில் உள்ளதால், பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நீர் வழங்கவும், மற்ற பாசன நிலங்களுக்கு நீர் திறக்கும் காலத்தை நீடிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வழக்கமாக ஜூன் மாதம் நீர் திறக்கப்பட்டு, ஏப்., வரை வழங்கப்படும். இப்பகுதிகளில், குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மழை பொழிவு குறைவு, நீர் நிர்வாக குளறுபடி, நீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி காலம் குறைந்துள்ளது.
நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழை தாமதம் காரணமாக, அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன், 24 தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, நவ., 6 வரை தண்ணீர் வழங்கப்பட்டது.
இப்பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி முடிந்து, தற்போது அறுவடை நடந்து வருகிறது. அமராவதி அணையில் திருப்தியான நீர்இருப்பு உள்ளதால், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், இரண்டாம் போகம் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், வரும் டிச., முதல், மார்ச் வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
2ம் கட்ட நீர் திறப்பு
அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெறும், 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, செப்., 27 முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலங்களுக்கு, ஆற்று மதகு வழியாக, 700 கனஅடி வீதம், 4,233.60 மில்லியன் கனஅடி நீர் என்ற அடிப்படையில், வரும், 2025 பிப்., 9 வரை நீர் வழங்கப்பட உள்ளது.
இப்பகுதிகளில், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. முழுமையாக பயிர் வளர்ந்து அறுவடை செய்ய ஏதுவாக, நீர் திறப்பு காலத்தை மார்ச் வரை நீடிக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, ஆண்டு தோறும், ஆக., மாதம் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு, செப்., திறக்கப்பட்டு, வரும், பிப்., வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.
இப்பகுதி விவசாயிகளும், நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களுக்கு, மார்ச் வரை நீர் வழங்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
நிரம்புகிறது
அமராவதி அணை, நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையால், கடந்த, ஜூலை, 18ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து, இரு மாதம், அணையிலிருந்து உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக திறக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
ஆனால், முறைப்படி பாசன அறவிப்பு இல்லாததால், உபரி நீரில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையால், மீண்டும் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ததும்பிய நிலையில் காணப்படுகிறது.
அமராவதி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 87.54 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,825 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 508 கன அடியாக இருந்தது, அணையிலிருந்து, 500 கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.