/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கனவு நிறைவேறுமா?
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கனவு நிறைவேறுமா?
ADDED : ஜூலை 21, 2025 11:26 PM
பொங்கலுார்; மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்க உருவாக்கப்பட்டதே பி.ஏ.பி., பாசன திட்டம்.
இதில், 12 அணை கட்ட திட்டமிடப்பட்டு, ஒன்பது அணை கட்டப்பட்டது. கேரள அரசு, இடைமலை ஆறு அணையை கட்டி முடித்துவிட்டது. தமிழக அரசு ஆனைமலை ஆறு, நல்லாறு அணை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
இரு அணைகளையும் கட்ட வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இரண்டு தலைமுறைகளாக போராடி வருகின்றனர். இரு மாவட்டங்களிலும் பாசனத்திற்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. இந்த இரண்டு அணைகளையும் கட்டினால் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் விட முடியும்.
மின் கட்டணம்பாதியாக குறையும் திருப்பூர், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீரேகுடிநீர் ஆதாரம். இப்பகுதிகளில் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது. இரு அணைகளும் கட்டப்பட்டால் நிலத்தடி நீர் மிகுந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. நிலத்தடி நீர் குறைவால் குடிநீருக்காக ஊராட்சிகளும், பாசனத்திற்காக பூமியிலிருந்து தண்ணீரை உறிஞ்ச விவசாயிகளும் மோட்டார் மற்றும் கம்ப்ரஸர்களை, 24 மணி நேரமும் இயக்குகின்றனர்.
ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வரை மின் கட்டணம் வருகிறது. அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேவையான அளவு கிடைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சில மணி நேரம் மோட்டார் ஓடினாலே போதும். இதனால் மின் கட்டணம், மோட்டார் தேய்மான செலவு பாதியாக குறையும். இதில் மட்டும் அரசுக்கு வருடத்திற்கு பல கோடி ரூபாய் மீதம் ஆகும்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரதான பயிர் தென்னை. அடிக்கடி ஏற்படும் வறட்சியால் விளைச்சல் சரிந்து தேங்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேவை பூர்த்தி ஆனால் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய், தேங்காய் விலை குறையும்.
போதுமான அளவு தண்ணீர் இருந்தால் விவசாயம் நன்றாக நடக்கும். ஆட்களுக்கான தேவை அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கிராம மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வது குறையும்.
விவசாயம், தொழில் வளர்ச்சிக்கு தண்ணீர் அடிப்படை தேவை. தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க பல ஆயிரம் ரூபாய் செலவிடுகின்றனர்.
விவசாயிகள் பொருளாதாரம் உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும். ஏற்கனவே, கட்டப்பட்ட அணைகளுக்கான செலவை தண்ணீர் வரி மூலம் விவசாயிகள் செலுத்தி கடனை அடைக்க உதவினர். அதேபோல், கடன் வாங்கி அணை கட்டினாலும் அதற்கான செலவை வட்டியுடன் செலுத்த விவசாயிகள் முன்வருவர்.
எனவே இரண்டு தலைமுறைகளாக கிடப்பில் போடப்பட்ட இவ்விரு அணைகளையும் கட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.