/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் ஓடைக்கரையோரம் பழமை அடையாளங்கள்
/
பல்லடம் ஓடைக்கரையோரம் பழமை அடையாளங்கள்
ADDED : ஏப் 12, 2025 11:18 PM

பல்லடம்: பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் நீரோடை, நகராட்சி மூலம் துார்வாரப்பட்டு வருகிறது.
பல்லடம் வரலாற்று ஆர்வலர் குழுவைச் சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:
துார்வாரப்பட்ட ஓடையின் கரைகளில் நம் முன்னோர் பயன்படுத்திய அடையாளங்கள் ஏதேனும் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சங்க கால, சோழர் காலத்தைய ஓடுகள் சில கிடைத்துள்ளன.
கருப்பு மற்றும் சிவப்பு நிறமுடைய ஓடுகள், கொடுமணல், கீழடி பகுதிகளில் கிடைத்ததாக கேள்விப்பட்டுள்ளோம்.
அதேபோன்ற ஓடுகள் பல்லடம் ஓடையிலும் கிடைத்துள்ளன. 9 மற்றும் 10ம் நுாற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
நவீன இயந்திரங்கள் உதவியுடன் இன்று செய்யும் வேலைப்பாடுகளை, நம் முன்னோர்கள் அன்று கைகளிலேயே செய்துள்ளனர்.
ஓடை பகுதியில், கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகள், களிமண்ணால் செய்யப்பட்ட கற்கள், கற்களில் செதுக்கப்பட்ட சிறிய சிற்பம், சிற்பத்துடன் கூடிய பானை என, பல்வேறு ஆதாரங்களும் இங்கு கிடைத்துள்ளன.
அருகே, ஓடையை ஒட்டியுள்ள கருப்பராயன் கோவில், 800 ஆண்டுகள் பழமையானது என்பதுடன், இதன் அருகே, முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள படித்துறை கற்களும் இருந்துள்ளன.
ஆராய்ந்து பார்க்கும்போது, 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது என்பது தெரிகிறது.
தொல்லியல் துறை அதிகாரிகள் இது குறித்து கூடுதல் ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவற்றை பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம்.

