ADDED : ஆக 30, 2025 11:43 PM

திருப்பூர்: ஆண்டிபாளையம் படகு குழாமிற்கு, ஞாயிறு விடுமுறையில் மட்டுமே மக்கள் அதிகளவில் வருகின்றனர்; படகு குழாமை பிரபலப்படுத்த, சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டிபாளையம் குளத்தில் படகு குழாம் அமைத்து, படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் படகு, துடுப்பு படகு, பெடல் படகுகள் உள்ளன. கடந்தாண்டு, நவ., மாதம், படகு குழாம் திறக்கப்பட்டது. வார விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிகளவிலான மக்கள், படகு குழாம் சென்று படகு சவாரியில் ஈடுபட்டனர்.தற்போது, படகு சவாரி செல்வோரின் எண்ணிக்கை குறைய துவங்கியிருக்கிறது. வார விடுமுறை, குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலான மக்கள் செல்கின்றனர். இருப்பினும், தினசரி மாலையில், படகு குழாம் செல்லும் உள்ளூர் மக்கள், அங்குள்ள சிறுவர் பூங்காவில் தங்கள் குழந்தைகளை விளையாட வைக்கின்றனர். படகு இல்ல அலுவலகத்தின் மேல் தளத்தில் திறந்தவெளி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து குளத்தை ரசிக்கும் மக்கள், ரம்மியமான சூழலையும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதாக உணர்கின்றனர்.
சுற்றுலாத்துறையினர் கூறுகையில், 'ஆண்டிபாளையம் பகுதி சுற்றுலா தலம் அல்ல. இதனால், பிற மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லை. அதேநேரம் உள்ளூர்வாசிகளின் பொழுதுபோக்கு தலமாக ஆண்டிபாளையம் குளம் விளங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் படகு சவாரியை, பொதுமக்கள் - அரசு பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான திட்டமும் ஆலோசனையில் உள்ளது. சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

