/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி
/
அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி
ADDED : ஜன 23, 2025 11:27 PM

உடுமலை; கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில், கழிப்பிட வசதியை சீரமைக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையம், கொழுமம் பிரிவு ரோட்டின் அருகே அமைந்துள்ளது. மையத்தில், 20க்கும் அதிகமான குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
பிரதான ரோட்டில் இம்மையம் உள்ளது. நாள்தோறும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதுடன், அதிவேகத்துடனும் செல்கின்றன.
மையத்தில் குழந்தைகளுக்கான ஒரு அறை மற்றும் சமையலறை மட்டுமே உள்ளது. அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளை வெளியில் விடவும் முடியாமல், ஒரே அறையில் அமர வைக்க வேண்டிய நிலை உள்ளது.
குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இடவசதி இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது. மேலும், கட்டடம் மிகவும் பழமையானதாக உள்ளது.
குழந்தைகள் செல்லும் கழிப்பறை சிதிலமடைந்தும், பழுதடைந்தும் இருப்பதால் அடிக்கடி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கன்வாடி மையத்தை முழுமையாக புதிய கட்டடத்தில் மாற்றுவதற்கும், தற்காலிகமாக கழிப்பிட வசதியை சீரமைப்பதற்கும், குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

