/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை அறிவிப்பு
/
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை அறிவிப்பு
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை அறிவிப்பு
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை அறிவிப்பு
ADDED : நவ 03, 2025 09:08 PM
உடுமலை: மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப வழிமுறைகள் அறிவித்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டு, சுமார் 1,135 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெருவாரியாக வளர்ச்சிப் பருவத்திலுள்ள பயிரில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் (பொ) கார்த்திகா கூறியதாவது:
விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை வயல்களில் விதைக்கும் போது, வயலைச் சுற்றிலும் வரப்பு பயிராக, 2-, 3 வரிசை தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விதைக்க வேண்டும். மேலும், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்ய வேண்டும்.
பயிர் விதைத்த ஒரு வாரம் முதல், வயல் முழுவதும் கண்காணித்து இலையின் அடிப்பாகத்தில் காணப்படும் முட்டைக்குவியல்கள் மற்றும் இளம்புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும்.
தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பயிர் விதைத்தவுடன், ஒரு ஏக்கருக்கு 5 முதல் -20 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்க வேண்டும்.
விதைப்பிற்கு முன் மக்காச்சோள விதைகளை சயான்டிரனிலிப்பேரால் 19.8 மற்றும் தயா மீதாக் ஷம் 19.8 மருந்துகளை ஒரு கிலோ விதைக்கு, 4 மி.லி., என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
மக்காச்சோளப் பயிரில் முன்குருத்து பருவத்தில் (விதைப்பு செய்து, 15 முதல் 20 நாட்கள்) படைப்புழுவின் தாக்குதல் தென்பட்டால், அசாடிராக்டின் 1.0 சதவீதம் 2.0 மி.லி., அல்லது குளோராண்டிரணிலிப்ரோல் 18.5 எஸ்.ஜி., 0.4 மி.லி., அல்லது புளுபெண்டிமைடு 20 டபிள்யூ ஜி 0.5 கிராம், 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வயலில் தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
படைப்புழு தாக்குதல் இளம் குருத்துப் பருவமான, 30 முதல், -35 நாட்கள் பயிரில் இருந்தால், மெட்டாரைசியம் அனிசோப்பிலியே 2.5 கிலோ அல்லது ஸ்பைனிடோரம் 11.7 எஸ்ஜி 0.5 மி.லி., அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 0.4 கிராம் அல்லது நொவலுரான் 1.5 மி.லி ., மருந்தை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இறுதியாக, மேற்கண்ட பருவங்களில் புழுக்கள் கட்டுப்படுத்த முடியாமல் பூக்கும் பருவத்திலும் (விதைத்த 60 நாட்களுக்கு மேல்) தென்பட்டால், குருத்துப் பருவத்தில் தெளிக்காத மருந்துகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி புழுவினைக் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே உரிய அளவில் பயன்படுத்தி குருத்துப் பகுதியில் தெளித்தல் வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவினைக் கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு, கூறினார்.

