/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹவுசிங் யூனிட்டில் சமூக விரோத செயல்கள் 'கனஜோர்'
/
ஹவுசிங் யூனிட்டில் சமூக விரோத செயல்கள் 'கனஜோர்'
ADDED : நவ 12, 2025 11:48 PM

திருப்பூர்: திருப்பூர் அருகே முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில் பாழடைந்து கிடக்கும் கட்டடங்களில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது.
முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோவை வீட்டு வசதி வாரியத்தால் கடந்த, 1987ம் ஆண்டில் ஹவுசிங் யூனிட் உருவாக்கப்பட்டது. தற்போது, ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
ஹவுசிங் யூனிட் உருவாக்கப்பட்ட போது, மக்களின் வசதிகளுக்காக பள்ளிக்காக, ஆறு கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
மீதமுள்ள, சமுதாய கூடம் உள்ளிட்ட, நான்கு அரசு கட்டடங்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இந்த குடியிருப்பு பகுதி ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனின் எல்லை பகுதியாக இருந்து வருவதால், போலீசாரும் பெரியளவில் எட்டி பார்ப்பது கிடையாது. இதனால், கஞ்சா, குட்கா, போதை ஊசிகள் பயன்படுத்துவது, போதையில் மோதி கொள்வது போன்ற செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடங்களில் இரவு நேரங்களில் அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. இதனால், கட்டடத்தை மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
அப்பகுதியில் நிரந்தமாக அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள சமுதாய கூடம், பத்து ஆண்டுகளுக்கு முன், குறைந்த வாடகையில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த கட்டடம் பாழடைந்து உள்ளது. இதனை போதை கும்பல் பயன்படுத்துகிறது. இந்த கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை மக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால், கோவை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், சமுதாய கூடத்தை விற்பனை செய்யும் முடிவில் உள்ளனர். இதனை கைவிட வேண்டும்.
ஹவுசிங் யூனிட் பகுதி சமூக விரோதிகளின் கூடரமாக மாறியுள்ளது. பயன்பாட்டில் இல்லாமல், பாழடைந்து கிடக்கும் கட்டடங்களுக்குள் போதை கும்பல் அமர்ந்து கொண்டு வலம் வருகின்றனர். போலீசாரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தாலும், உரிய ரோந்து மேற்கொள்வதில்லை. இரவு நேரங்களில் போதை நபர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போலீசாரின் கண்காணிப்பு பெயருக்கு உள்ளது. அமைச்சர், கலெக்டர் என, அனைத்து தரப்பினரிடம் கொண்டு சென்று விட்டோம். இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.
- ஹவுசிங் யூனிட் பொதுமக்கள்.:

