/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆன்லைன்' வர்த்தகத்தில் நுாதன மோசடி: ஆர்பிட்ரேஷன் கவுன்சில் எச்சரிக்கை
/
'ஆன்லைன்' வர்த்தகத்தில் நுாதன மோசடி: ஆர்பிட்ரேஷன் கவுன்சில் எச்சரிக்கை
'ஆன்லைன்' வர்த்தகத்தில் நுாதன மோசடி: ஆர்பிட்ரேஷன் கவுன்சில் எச்சரிக்கை
'ஆன்லைன்' வர்த்தகத்தில் நுாதன மோசடி: ஆர்பிட்ரேஷன் கவுன்சில் எச்சரிக்கை
ADDED : நவ 20, 2025 02:56 AM
திருப்பூர்: 'ஆன்லைன்' வர்த்தகம் செய்யலாமென நுாதன முறையில் ஏமாற்றி வருவதால், இளம் தொழில்முனைவோர் கவனமாக இருக்க வேண்டும்' என, திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்பிட்ரேஷன் கவுன்சில் ஆலோசனை கூட்டம், 'சைமா' சங்க அலுவலகத்தில், அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினராக உள்ள தொழில் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திருப்பூரில் உள்ள இளம் தொழில் முனைவோரை குறிவைத்து, திண்டுக்கல்லை சேர்ந்த ஆசாமி ஏமாற்றி வருவது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இளம் தொழில் முனைவோர்களிடம் பேசும் திண்டுக்கல்லை சேர்ந்த ஆசாமி, கோவையில் ேஷாரூம் வைத்து சில்லரை விற்பனை செய்ய இருப்பதாகவும், அதற்காக ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் வழங்குமாறும் ஆர்டர் கேட்டு, ஆடைகளை கொள்முதல் செய்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.
இதேபோல், 10க்கும் அதிகமான இளைய தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி., காலனியில் இயங்கி வரும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை கொள்முதல் செய்து ஏமாற்றியதாக நேற்று முன்தினம் புகார் வந்துள்ளது. இதுதவிர, 'இன்ஸ்டாகிராமில்' தொடர்பு கொண்டு, 'ஆன்லைன்' வர்த்தகம் செய்யலாமென, நுாதனமாக பேசி, 20 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக நேற்றும் புகார் பதிவாகியுள்ளது.
திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறுகையில், ''இளம் தொழில்முனைவோரை குறிவைத்து, சிலர் வியாபாரிகள் என்ற போர்வையில் ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.
அனுபவம் வாய்ந்தவர்கள் எளிதாக சிக்க மாட்டார்கள் என்பதால், புதிய தொழில்முனைவோரை அணுகி ஏமாற்றி வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களிடம் வர்த்தகம் செய்யும் இளைய தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் நடக்கும், 'ஆன்லைன்' வர்த்தகத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். சட்டப்பூர்வ நடவடிக்கையை பின்பற்றியே வர்த்தகம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு, ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை அணுகலாம்,' என்றார்.

