/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் துணையா? விவசாயிகள் கேள்வி
/
மண் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் துணையா? விவசாயிகள் கேள்வி
மண் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் துணையா? விவசாயிகள் கேள்வி
மண் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் துணையா? விவசாயிகள் கேள்வி
ADDED : மே 04, 2025 12:28 AM
பல்லடம்: ''மண் கடத்தல் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை எனில், தாலுகா அலுவலகங்கள் முன், அறிவிப்பு பலகை வைக்கப்படும்,'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி எல்லைப் பகுதியில் உள்ள நீரோட்டையில், நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டது. இது தொடர்பாக, விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், நேரில் ஆய்வு செய்து, பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்டதை உறுதி செய்தோம். ஆனால், இதை யார் கடத்தியது என்பது குறித்து, கரைப்பதுார் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கவுரியிடம் கேட்டதற்கு, 'மண் அள்ளப்பட்ட இடம் வீரபாண்டி ஊராட்சிக்கு சொந்தமானது' என்று கூறி நழுவினார்.
தொடர்ந்து, வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் தொடர்பு கொண்ட போது, மண் அள்ளப்பட்ட இடம் இரு ஊராட்சி எல்லையில் இருப்பதாகவும்; தனது கட்டுப்பாட்டில் வராது என்றும் கூறினார். இவ்வாறு, இரு கிராம நிர்வாக அலுவலர்களின் கட்டுப்பாட்டிலும் வராத இந்த இடத்தில், யார் வேண்டுமானாலும் மண் கடத்திச் செல்லலாம் என்ற நிலை உள்ளது.
மண் கடத்தியது யார் என்பது குறித்து கண்டறியாமல், வருவாய்த்துறை அதிகாரிகள், எல்லைகளை சுட்டிக்காட்டி, தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என நழுவுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த செயல்பாடு, மண் கடத்தும் மாபியா கும்பலுக்கு துணை போவதாக சந்தேகம் எழுகிறது. மண் கடத்தப்பட்ட இடம் எந்த கிராம நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தாலுகா அலுவலகங்கள் முன் இது தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

