/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிரெய்லர் பார்க்க நாங்க தான் கிடைச்சோமா?'
/
'டிரெய்லர் பார்க்க நாங்க தான் கிடைச்சோமா?'
ADDED : ஜூலை 18, 2025 11:40 PM

பல்லடம்; 'டிரெய்லர் பார்க்க நாங்கதான் கிடைத்தோமா?' என, சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில், பொள்ளாச்சி -- பல்லடம் நெடுஞ்சாலை, சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 2.5 கி.மீ., துாரத்துக்கு, 21 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் தடிமனாக உள்ள இந்த வேகத்தடைகளால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், இவற்றை அகற்ற வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில், 21 வேகத்தடைகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. விபத்துகளை தடுக்க டிரெய்லர் பார்ப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரெய்லர் பார்க்க நாங்கள்தான் கிடைத்தோமா? இதுதான் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையா? நாங்கள் குறிப்பிடும்படியே இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
அதுபோல், தற்போது, மூன்று விபத்துகள் ஏற்பட்டுள்ளன. வேகத்தடை இருப்பதை கண்டு, கார் ஒன்று வேகத்தை குறைக்க, பின்னால் வந்த ஈச்சர் வேன், கார் மீது மோதாமல் இருக்க, இடதுபுறமாக சென்றதால் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது முழுக்க முழுக்க நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் நடந்து வருகிறது. வேகத்தடைகளை அகற்றி, இணைப்புச் சாலைகளில் அவற்றை அமைக்க வேண்டும் என, முதல்வர் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனம், கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது. இதேபோல், மற்றொரு ஸ்பீடு பிரேக்கரில், கார் மீது ஈச்சர் வேன் ஏறி விபத்து ஏற்பட்டது. மற்றொரு இடத்தில், வேகத்தடையில் ஏறிய போது இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்துக்குள்ளானார்.
இவ்வாறு, அடுத்தடுத்த வாகன விபத்துகளால், சுல்தான்பேட்டையில் பகுதியில் பரபரப்பு நிலவியது.