/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்க கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் தயார்
/
சுங்க கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் தயார்
ADDED : மார் 01, 2024 12:32 AM
திருப்பூர்:வேலம்பட்டி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்க ஏற்பாடுகள் தயாராகியுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையக (நஹாய்) அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியிலிருந்து அவிநாசிபாளையம் வரை என்.எச்., 381 நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 31.8 கி.மீ.,
இதன் மொத்த திட்ட செலவு 148.66 கோடி ரூபாய். தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கிறது. இதில் சுங்க கட்டணம் வசூலிக்க நெடுஞ்சாலை துறை ஆணையகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 டிச., முதல் தேதி தமிழக அரசின் தலைமை செயலர் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதியளித்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கடந்த 2023 ஏப்., 27ம் தேதி, சுங்க கட்டண சேவையை துவங்க அனுமதித்தார்.
மத்திய அரசு, 2024 மார்ச் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிக்க உத்தேசித்துள்ளது. இது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுங்கச் சாவடி செயல்படும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும், அதன் மூலம் பொருளாதாரமும் மேம்படும். சுற்றுப் பகுதியில் சாலை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
கழிப்பறைகள், போக்குவரத்து உதவி போலீஸ் ஸ்டேஷன், மருத்துவ உதவி மையம், 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ரோந்து; 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, விபத்து மற்றும் மீட்பு சேவை ஆகியன வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுங்க கட்டண விவரம்
இலகு ரக சொந்த வாகனம் -40 ரூபாய்; இலகு ரக சரக்கு வாகனம் - 70. பஸ், லாரி -- 145. மூன்று அச்சு சரக்கு வாகனம் - 155; கனரக இயந்திர வாகனம் - 225. மல்டி டிரக் 275 ரூபாய்.திருப்பூர் மாவட்ட பதிவு வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 20 கி.மீ., சுற்றளவு பகுதியில் உள்ள இலகு ரக சொந்த வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் 330 ரூபாய் என்ற அடிப்படையிலும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பிலும் எதிர்ப்பு
இந்த சாலையைப் பொறுத்தவரை திருப்பூர் நகருக்குள் நுழைந்து வருவது; சாலை பணிகள் பல்வேறு இடங்களில் முழுமை பெறாமல் உள்ளது போன்ற காரணங்களால் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், வேலம்பட்டி சுற்றுப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்து உள்ள நிலையில், சுற்றுப்பகுதியினர் பெரும் பொருளாதார சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது.சுங்க சாவடி அமைந்துள்ள இடமே நீர் நிலை என்பதால் அதை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டக்குழு தரப்பில் எழுந்துள்ளது.

