/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மைதானத்தில் கலையரங்கம்: பெற்றோர் அதிருப்தி
/
பள்ளி மைதானத்தில் கலையரங்கம்: பெற்றோர் அதிருப்தி
பள்ளி மைதானத்தில் கலையரங்கம்: பெற்றோர் அதிருப்தி
பள்ளி மைதானத்தில் கலையரங்கம்: பெற்றோர் அதிருப்தி
ADDED : நவ 22, 2025 06:35 AM

திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 3 ஆயிரம் மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவியர் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள, பிரத்யேக விளையாட்டு மைதானம் இல்லை.
'ப' வடிவில் உள்ள பள்ளி கட்டடத்தின் நடுவில் உள்ள, காலியிடத்தில் த்ரோபால், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை மாணவியர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் கலையரங்கம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி துவங்கியிருக்கிறது. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
கந்தசாமி கவுண்டர் என்பவர், பள்ளிக்காக இடத்தை தானமாக வழங்கினார். பல ஆண்டுகளாக அந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர் பலர், விளையாட்டில் பல்வேறு பதக்கம் பெற்று, சாதனை புரிந்துள்ளனர்.
கடந்த, 2010ல், விளையாட்டு மைதானமாக இருந்த இடத்தில் வகுப்பறை கட்டப்பட்டன. 'ப' வடிவில் உள்ள பள்ளி கட்டடத்தின் நடுவில் உள்ள, காலியிடத்தில் தான் மாணவியர் தற்போது விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
தற்போது அங்கும் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டால் மாணவியரின் விளையாட்டு நலன் முற்றிலும் தடைபடும். எனவே, கலையரங்கம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என, சி.இ.ஓ.விடம் முறையிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நடைமுறை மீறல் தொடரலாமா? பொதுவாக, அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் உரிமம் வழங்கப்படுகிறது. அதில், 'பள்ளிகளில் கட்டாயம் விளையாட்டு மைதானத்துக்கென இடம் இருக்க வேண்டும்' என்பதும் ஒரு விதிமுறை. அரசு, மாநகராட்சி பள்ளிகளில், இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை; இருப்பினும், பள்ளிகள் இயங்குகின்றன.
பழனியம்மாள் பள்ளியில், ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானத்தில் தான் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் மிச்சத்தில் உள்ள இடம் தான் விளையாட்டு திடலாக இருந்து வருகிறது. அங்கும் கட்டடம் எழுப்புவது, நடைமுறை மீறல் என, கல்வியாளர்கள் சிலர் கூறினர்.

