/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைஞர் கைவினை திட்டம்; தொழில் துவங்க அழைப்பு
/
கலைஞர் கைவினை திட்டம்; தொழில் துவங்க அழைப்பு
ADDED : ஜூலை 22, 2025 10:05 PM
உடுமலை; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், கலைஞர் கைவினை திட்டத்தில், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது:
கைவினை கலைகள் மற்றும் தொழில் சார்ந்த சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம், கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தில், மூன்று லட்சம் ரூபாய் வரை பிணையமில்லாத வங்கிக்கடன் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம்; 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோருக்கு, திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
தையல், கட்டட வேலை, பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினை பொருட்கள், காலணி தயாரிப்பு, மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், அழகுக்கலை, பூட்டு தயாரிப்பு, சுதை வேலைப்பாடுகள், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், படகு கட்டுமானம், சிற்ப வேலைப்பாடு, ஓவியம் தீட்டுதல், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், கண்ணாடி வேலைப்பாடு, பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிப்பு, மலர் வேலைப்பாடு, உலோக வேலைப்பாடு, பாசிமணி வேலைப்பாடு, மூங்கில் பிரம்பு, சணல், பானை வேலைப்பாடு உள்ளிட்ட தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2024, டிச. 11 ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை, தொழில்முனைவோர் 526 பேர் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்; 192 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், 85 பேருக்கு கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
கூடுதல், விபரங்களுக்கு, 0421 2475007, 89255 34024, 89255 34025 என்கிற எண்களில் அழைக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.