sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெரிதினும் பெரிது கேள்! பேரிலக்கு நோக்கி நகருமா பின்னலாடை துறை? பேரார்வம் பொங்க இளம் தொழில்துறையினர்

/

பெரிதினும் பெரிது கேள்! பேரிலக்கு நோக்கி நகருமா பின்னலாடை துறை? பேரார்வம் பொங்க இளம் தொழில்துறையினர்

பெரிதினும் பெரிது கேள்! பேரிலக்கு நோக்கி நகருமா பின்னலாடை துறை? பேரார்வம் பொங்க இளம் தொழில்துறையினர்

பெரிதினும் பெரிது கேள்! பேரிலக்கு நோக்கி நகருமா பின்னலாடை துறை? பேரார்வம் பொங்க இளம் தொழில்துறையினர்


ADDED : செப் 23, 2024 12:49 AM

Google News

ADDED : செப் 23, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பின்னலாடைத்துறையில் கோலோச்சும் திருப்பூர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிறைந்ததாக திகழ்கிறது. பல்வேறு சவால்களைக் கடந்து சாதிக்க, அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர், சாதனை புரிந்த இளம் தொழில்முனைவோரின் கருத்துகள், பின்னலாடைத்துறையினருக்கு உறுதுணையாக விளங்குகின்றன.

''திருப்பூரில் 'பிராண்டட்' நிறுவனத்தினர் அதிகளவு உருவாக வேண்டும். அதிகளவு பில்லியனர்கள்(ஒரு பில்லியன் என்பது நுாறு கோடி ரூபாய்) இல்லை என்பது ஒரு குறையே. ஆடை உற்பத்தி சார்ந்த ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். தொழில் துறையினர் பெரிதாகச் சிந்தித்து, சிந்தனையை பெரியளவுக்குக் கொண்டு வர வேண்டும்''

சமீபத்தில் நடந்த இந்திய தொழிற்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை மற்றும் 'யங் இந்தியன்ஸ்' துணை கமிட்டி சார்பில் நடந்த 'சைனோகிராப் - 2.0' கருத்தரங்கில் பேசிய 'ஏர்செல்' நிறுவனர் சிவசங்கரன் தெரிவித்த கருத்துகள் இவை. இதேபோல், அவ்வப்போது பல்வேறு கருத்தரங்குகளிலும், தொழில்துறையினர் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து தொழில் வல்லுனர்கள் கருத்துகளைப் பரிமாறிவருகின்றனர்.

இலக்கைப் பேரிலக்காக வேண்டியதும், அதை நோக்கிய பயணம் வேகம் பெற வேண்டும் என்றும் இளம் தொழில்துறையினர் பேரார்வம் காட்டுகின்றனர். இதோ, அவர்களது கருத்துகள்:

சொந்த 'பிராண்ட்' என்று நிஜமாகும்?


இந்தியாவுக்கான தேவைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. ஏற்றுமதி வர்த்தகத்துக்கு முழுவீச்சில் தயாராகிவிட்டோம். உள்நாட்டு வர்த்தகத்துக்கு, நாம் இன்னும் கூடுதலாக தயாராக வேண்டும். திருப்பூரில் இருந்து, 'பிராண்ட்' உருவாக்கப்பட வேண்டும்.

ஒரு சில 'பிராண்ட்' மட்டுமே இருக்கும் நிலைமாறி, பல திருப்பூர் 'பிராண்ட்'கள் சந்தைக்கு வர வேண்டும். உலகின், அனைத்து 'பிராண்ட்'களுக்கும், ஏற்றுமதியாளர்கள் இங்கு உற்பத்தி செய்து அனுப்புகின்றனர். சொந்த 'பிராண்ட்'டை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

'யங் இந்தியன்ஸ்' என்ற தொழில் முனைவோர், திறன் வளர்ப்பு, நிதியளிப்பு, மார்க்கெட்டிங் என, படிப்படியாக கற்று வருகிறோம். 'சைனோகிராப் -2.0' வழிகாட்டி கருத்தரங்கு, பல்வேறு புதிய விஷயங்களை கற்பித்துள்ளது.

- நிரஞ்சன், தலைவர், 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு திருப்பூர் கிளை

வெற்றிக்கதைகளால் புதிய உத்வேகம்


தொழிலாளராக மாற காத்திருக்கும் மாணவர்களிடையே, தொழில்முனைவோராக உயர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில், கருத்தரங்கிற்கு மாணவர்கள், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். தொழில்துறையினரின் வெற்றி கதையை கேட்கும் போது, புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். அதற்காகவே, அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.

கருத்தரங்கில், 500 பேர் பங்கேற்றதில், குறைந்தது, 10 புதிய தொழில் முனைவோராவது உருவாக வேண்டும்; அவர்கள் வாயிலாக, 5,000 பேர் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அப்துல்கலாம், கல்லுாரி நிகழ்வுகளில் பங்கேற்று, மாணவர்களை ஊக்குவித்ததை போல், புதிய சிந்தனையை துாண்டி, சாதனையாளராக உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு.

- இளங்கோ, சேர்மன், சி.ஐ.ஐ., திருப்பூர் கிளை

பெரிய இலக்கு இனிக்கும் விவாதம்


இனி, ஆண்டுதோறும் 'சைனோகிராப்' நடத்த திட்டமிட்டுள்ளோம். திருப்பூரில் உள்ள தொழில்துறைக்கு, தற்போதைய தேவை என்ன என்பது குறித்து விவாதித்துள்ளோம். அதை எப்படி செயல்படுத்தலாம் என, வெற்றியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில், 'பேமிலி பிசினஸ்' அதிகம். ஒரு தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது; அதில் ஏற்படும் சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளோம்.

வரும், 2025 முதல், புதிய வாய்ப்புகள் வரும்; அதை எப்படி ஈர்ப்பது என்று, பலரும் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர். 'இலக்கு சிறியதாக இருக்க கூடாது; பெரிதாக ஆசைப்பட வேண்டும்' என்று நுணுக்கமாக கூறியதை, பலரும் வியப்புடன் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

திருப்பூரில் இருந்து, 'பிராண்ட்'களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' எவ்வளவு முக்கியம் என்பதும் தெரியவந்துள்ளது.

- மனோஜ்குமார், துணை சேர்மன், சி.ஐ.ஐ., திருப்பூர் கிளை

திறமை இருப்போருக்கு பணம் வரும் தன்னாலே...


சிவசங்கரன் பேசியது, எளிமையானது மட்டுமல்ல; யதார்த்தமானது. உண்மையை பேச துணிச்சல் வேண்டும். வெற்றியாளராக மாற, முதலில் மனதளவில் தயாராக வேண்டும். நல்ல சிந்தனைத்திறன் வேண்டும். எதிர்காலத்தை, நிகழ்காலமாக நினைத்து யோசிக்கும் போது, வெற்றி எளிதாகும் என்றார்.

பெரிதாக கனவு காணவேண்டும். வெற்றியாளர் ஒருவரை பார்த்து, அவரை பின்தொடர்ந்தால் வெற்றி பெற முடியும் என்று 'குறிப்பு' கொடுத்தது உபயோகமாக இருந்தது. தொழிலுக்கு முதலீடு அவசியம்.

தொழில் முதலீடுக்காக காத்திருக்காமல், திறமையை பயன்படுத்தி அருமையான திட்ட அறிக்கையை தயாரிக்கலாம்; பணம் முதலீடு செய்ய பலரும் தயாராக இருக்கின்றனர். தொழில் மட்டுமல்ல... உடல் ரீதியான ஆரோக்கியமும் மிக முக்கியம் என்றது பாராட்டத்தக்கது. 30 நிமிட நடை பயிற்சி; மூச்சு பயிற்சி அவசியம் என்றார்.

திருப்பூரில், இரவு - பகலாக வேலை பார்ப்பார்கள்; அவசியம், எட்டு மணி நேர உறக்கம் அவசியம் தேவை. முடியாதவர்கள், யோகநித்திரை' என்ற பயிற்சியை செய்தால், நீண்ட நேரம் துாங்கிய பயன் கிடைக்கும் என நரம்பியல் ஆராய்ச்சியாளரின் கருத்துக்களை எடுத்துரைத்தது பயனுள்ளதாக இருந்தது.

- மேகனா, குழந்தைகள் நலப்பிரிவு, 'யங் இந்தியன்ஸ்', திருப்பூர் கிளை

வாய்ப்பு ஏராளம் இலக்கே முக்கியம்


இக்கருத்தரங்கு, 'இன்ஸ்பயரிங் சீரியஸ்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. பலதரப்பட்ட வயதுடைய நபர்களை அழைத்து பேச வைத்தோம்; அதாவது, 65 வயது முதல், 30 வயது வரையுள்ள, பல்வேறு தொழில் பிரிவுகளை சேர்ந்த முன்னோடிகளை அழைத்து பேச வைத்துள்ளோம்.

தொழிலுக்கு புதுமையும் வேண்டும்; தொழில் முன்னோடிகளின் அனுபவமும் அவசியம். குறுகிய காலத்தில், 200 மடங்கு வளர்ச்சி பெற்ற, சுனில் ஜுன்ஜுன்வாலா பேசினார். திருப்பூரில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்ற நமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க ேவண்டும்.

'யங் இந்தியன்ஸ்' சார்பில், நான்கு ஆண்டுகள் முன், முதல் கருத்தரங்கு நடத்தியதை தொடர்ந்து, இதுபோன்ற கருத்தரங்கு நடத்தப்படும். கல்லுாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தொழில் முனைவோராக வேண்டும் என்று.

- மோகன், துணைத்தலைவர், 'யங் இந்தியன்ஸ்', திருப்பூர்

'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' ஆக்கபூர்வ வழிகாட்டுதல்


திருப்பூரில், 'பிராண்ட்' உருவாகவில்லை; நமது அடையாளத்துக்கு, 'பிராண்ட்' அவசியம். அதற்கான அடிப்படை சமூக ஊடகங்களில் இருந்து கிடைக்கும். 'டிஜிட்டல் மார்க்கெட்' குறித்து இரண்டு பேர் விவரமாக பேசினர். வாடிக்கையாளர்களை கண்டறிந்து, இதன்மூலம் எளிதாக கொண்டு சேர்க்க முடிகிறது. நமது 'பிராண்ட்' அப்போதுதான் வெற்றியடையும். கருத்தரங்கில் ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் அல்ல; வெளிநாடுகளுக்கும் நமது, 'பிராண்ட்'களை கொண்டு சேர்க்க முடியும். நாங்கள், 10 ஆண்டுகளாக, பிரத்யேக 'பிராண்ட்'டில், ஆடை உற்பத்தி செய்து வருகிறோம்.

- மணிகண்டன், 'யங் இந்தியன்ஸ்', திருப்பூர்

பயணிக்க வேண்டிய துாரம் தெரிந்தது


திருப்பூர் பின்னலாடை கிளஸ்டராக இருக்கிறது. தொழில்துறையினர் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 'சைனோகிராப்' நடத்தினோம். மிகுந்த வரவேற்பை பெற்றது. 'பேமிலி பிசினஸ்' என்பதை எப்படி வெற்றிகரமாக நடத்தலாம் என்று பேசினர்.

திருப்பூரில், குறு, சிறு தொழிற்சாலைகளே உள்ளன. அந்நிறுவனங்கள், பெரு நிறுவனங்களாக உயர என்ன செய்ய வேண்டும் என்று, விரிவாக விளக்கப்பட்டது. இனிமேல், ஆண்டுதோறும் இதுபோன்ற கருத்தரங்கு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

1990 முதல், 2010 முதல், திருப்பூர் நல்ல வர்த்தக வளர்ச்சி பெற்றது; தற்போதைய நிலைக்கு, 65 ஆயிரம் கோடியை தாண்டியிருக்க வேண்டும ஆனால், 40 ஆயிரம் கோடியை தொடரவில்லை. வெளியாட்கள் வந்து கூறும்போததான், திருப்பூர் பயணிக்க வேண்டிய துாரத்தை அறிய முடிகிறது.

நாம், 20 ஆண்டுகளில் கொண்டு வந்த தொழில்நுட்பத்தை, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் மூன்று ஆண்டுகளில் செய்துவிட்டன. இதேநிலை தொடர்ந்தால், திருப்பூர் தொழில், அங்கே நகரும் அபாயம் உள்ளது. கருத்தரங்கில் பேசியதை, நாம் ஒவ்வொருவரும் யோசித்து பார்த்து, அதற்கு ஏற்ப புதிய செயல்பாட்டை துவக்க வேண்டும்.

- தினேஷ்பாபு, செயலாளர், சி.ஐ.ஐ., திருப்பூர்

உடலே ஆயுதம்: உறக்கம் கெடக்கூடாது


கருத்தரங்கில், 'காலை, 11:00 மணி வரை துாங்கிவிட்டு, அதற்கு பிறகு வேலை பார்க்கலாமா' என்று ஒருவர் கேட்டார். அவ்வாறு துாங்குவது தவறு, காலை, 6:00 மணிக்கு எழுந்து, இரவு, 9:00 மணிக்கு துாங்க செல்ல வேண்டும். இளம் தலைமுறையினர் திறமை இருந்தும், தவறான துாக்கத்தால் உடல் நிலையை கெடுத்துக்கொள்கின்றனர்.

தொழில், கல்வி என, எதுவாக இருந்தாலும், உடல்தான் நமது ஆயுதம்; நாம் வாழ்வில், நீண்ட துாரம் ஓட வேண்டியுள்ளது; அதற்கேற்ப, நமது உடலை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். துாக்கத்தை கெடுத்து, சீக்கிரமாக ஓடினாலும், பாதிப்பு நமக்குத்தான்.துாக்கத்தை துறந்து செய்யும் பணியில், போட்டி என்பது, தொழிலில் இருக்கத்தான் செய்யும்; நமது பணிகளை திறம்பட செய்தாலே, நமக்கான வாய்ப்புகள் கைகூடும். 'கடின உழைப்பு' என்று நினைத்து உடலை வருத்திக்கொண்டு உழைக்க கூடாது. சூரிய உதயத்தின் போது, நாமும் துாங்கி எழுந்தால், உடல்நலம் பாதுகாக்கப்படும்.

தொழில் வளர்ச்சிக்காக நடந்த கருத்தரங்கில் பேசிய பலரும் உடல் நலத்தை வலியுறுத்தியும் பேசியுள்ளனர்; தெளிவான முடிவு எடுக்க, சரியான துாக்கம் அவசியம்.

- டாக்டர் செந்தில், 'யங் இந்தியன்ஸ்', திருப்பூர்

குடும்பத்தினருடனும் நேரம் செலவிட வேண்டும்


திருப்பூர் என்பது தொழிலாளர் நகரம் என்கிறோம்; இங்கு, குறு, சிறு தொழில்முனைவோர்களும் உள்ளனர். மொத்தமுள்ள, 12 லட்சம் மக்களில், ஆறு லட்சம் பேர் தொழிலாளர் என்றால், பணியாளர், குறு, சிறு தொழில்நிறுவன உரிமையாளர் உள்ளனர். அனைவருக்கும் ஆரோக்கியம் அவசியம். உடல் ஆரோக்கியத்தை காட்டிலும், மன ஆரோக்கியம் மிக முக்கியம். மன இறுக்கத்தை தவிர்க்க, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும். 'ரிலாக்ேஷசன்' இருந்தால் மட்டுமே, தொழிலிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

தொழிலில் இருப்பவர்களும் சரி, தொழில் துவங்க இருப்போரும், இதுபோன்ற கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். திருப்பூரில் நடக்கும், சிறப்பு கருத்தரங்கு, கண்காட்சிகளில் பங்கேற்றால் மட்டுமே, புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய முடியும்.

- ராமன் அழகிய மணவாளன், தொழில்நுட்ப ஆலோசகர்

அனுபவ பகிர்வு பயன்கள் மிகுதி


'லெஜன்ட்ஸ் ஆப் திருப்பூர்' என்ற திருப்பூரின் மூத்த தொழில்துறையினர் வாயிலாக, வெற்றிக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. பிரதீப் சக்கரவர்த்தி பேசியதில் இருந்து, சேர, சோழ, பாண்டியர்கள் என, 1,700 ஆண்டுகள் உலகத்தை நாம் ஆண்டது குறித்தும், நமது மேலாண்மை திறனை நினைவூட்டுவதாக இருந்தது. ஒரு நிமிட கதை பேசும் ராமகிருஷ்ணன், புதிய நுணுக்கத்தை விளக்கினார்.

'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', 'டிஜிட்டல் யூடியூபர்' 'நேச்சுரல் காஸ்மெட்டிக்' என, சீனியர் முதல், ஜூனியர் வரை அழைத்து பேச வைத்தோம். வெற்றி பெற்றவர், வெற்றி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தங்ளது அனுபவங்களை பகிர்ந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

திருப்பூரின் அனைத்து தொழில் பிரிவுகளும் பங்கேற்றன. நாளைய தொழில்துறையினர் அறிய வேண்டுமென, ஐந்து கல்லுாரிகளை சேர்ந்த, 100 இளைஞர்கள் பங்கேற்றது பயனுள்ளதாக அமைந்துள்ளது.

- விமல்ராஜ், 'சைனோகிராப் 2.0' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்.,

இங்கு சாத்தியமா?''திருப்பூரில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் 'ஏர்செல்' நிறுவனர் சிவசங்கரன். சென்னையில் ஐ.ஐ.டி.,யும், திருச்சியில் ஐ.ஐ.எம்.,-ம் உள்ளன. இதனால், திருப்பூரில் இவற்றைக் கொண்டு வருவது கடினம். இருப்பினும் ஆடை வடிவமைப்புத் தொழிலுக்கென திருப்பூரில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கிளைகளைக் கொண்டு வர முயற்சிக்கலாம். எதிர்காலத்தில் இங்கு ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்குவோம்'' என்று கூறுகின்றனர் திருப்பூரைச் சேர்ந்த இளம் தலைமுறை தொழில்துறையினர்.








      Dinamalar
      Follow us