/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பயன் புள்ளிவிவர அறிக்கை தயாராகுமா?
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பயன் புள்ளிவிவர அறிக்கை தயாராகுமா?
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பயன் புள்ளிவிவர அறிக்கை தயாராகுமா?
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பயன் புள்ளிவிவர அறிக்கை தயாராகுமா?
ADDED : ஜன 05, 2025 02:16 AM
திருப்பூர்: 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் பயன்பெறும் விவசாய நிலங்கள் குறித்த புள்ளிவிபர அறிக்கை தயார் செய்ய வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து முடிந்துள்ளது. கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டுகளை கடந்த கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், திட்டத்தின் பயனை அனுபவிக்க கொங்கு மண்டல விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், 243 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறது; இதன் வாயிலாக, 7,545 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும். திருப்பூர் மாவட்டத்தில், 385 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, 8,148 ஏக்கர் விவசாய நிலம்; ஈரோடு மாவட்டத்தில், 343 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, 8,857 எக்டர் விவசாய நிலம் பயன்பெறும் என, திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதில், பெரும் பரப்பளவிலான நிலங்கள் வானம் பார்த்த மானாவாரி விவசாயம் நிலம் என்ற நிலையல், குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, மானாவாரி நிலங்களும் நீர் வளம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. அத்திக்கடவு திட்டம் சார்ந்த பகுதிகளில் சோளம், மக்காசோளம், நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திட்டத்தின் பயன் தொடர்பான விரிவான புள்ளிவிபர அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் பரப்பு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சாகுபடி, அத்திக்கடவு திட்டத்தால் விவசாய பரப்பு அதிகரித்துள்ளதா, எந்தெந்த பயிர் சாகுபடிக்கு ஏற்ற சூழல் அங்குள்ளது, அத்திக்கடவு திட்டத்தை சாதகமாக்க விளை நிலங்கள் விற்கப்படுகிறதா என்பது போன்ற விரிவான விவரங்களை, புள்ளியில் துறை அலுவலர்கள் வாயிலாக சேகரிக்க வேண்டும்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்களிடம் கேட்ட போது, 'அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் செயல்பாடு குறித்த புள்ளிவிவரம் சேகரிக்க வேண்டும் என, அரசு வழிகாட்டுதல் வழங்கினால், அதற்கான பணி மேற்கொள்ளப்படும். அத்தகைய புள்ளி விபரங்களின் அடிப்படையில், இரண்டாம் கட்ட பணிகளை துவக்குவது, விடுபட்ட குளம் குட்டைகளை சேர்ப்பது என்பது, வெற்றிகரமாக அமையும்,' என்றனர்.