/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; அதிகரிக்கும் விவசாய பரப்பு தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திரத்துக்கு மாறும் விவசாயிகள்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; அதிகரிக்கும் விவசாய பரப்பு தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திரத்துக்கு மாறும் விவசாயிகள்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; அதிகரிக்கும் விவசாய பரப்பு தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திரத்துக்கு மாறும் விவசாயிகள்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; அதிகரிக்கும் விவசாய பரப்பு தொழிலாளர் பற்றாக்குறையால் இயந்திரத்துக்கு மாறும் விவசாயிகள்
ADDED : ஜன 26, 2025 03:29 AM

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தால் விவசாய பரப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், விவசாய தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், இயந்திர பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
'நுாறு நாள் திட்ட பணியாளர்களை, விவசாய தொழிலில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், 24 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலம் பாசன வசதி பெறும் வகையில், 1,916 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இதனால், வானம் பார்த்த மானாவாரி நிலங்கள் உள்ள விவசாய நிலத்தில் உள்ள குளம், குட்டைகள் கூட நிரம்ப துவங்கியிருக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீர் வளம் இருப்பதால், நிலத்தில் விவசாயம் செய்யவும், விவசாயிகள் முன்வருகின்றனர். இருப்பினும், விவசாய தோட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது, அதிகமாக இருக்கிறது.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாயம் செழிக்க வேண்டும்; தரிசு நிலங்கள் விளைநிலமாக மாற வேண்டும் என்ற நோக்கில் தான், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கேற்ப, குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படும் நிலையில், விவசாய பரப்பும் விரிவடைய துவங்கியிருக்கிறது. ஆனால், விவசாய தொழில் மேற்கொள்ள, தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.
இதனால், தானியங்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் அந்தந்த கிராம ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு செல்கின்றனர்.
அவர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்தினால், விவசாய தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். நுாறு நாள் திட்டத்தில் அரசு வழங்கும் ஊதியத்துடன்,விவசாயிகளும் ஒரு தொகையை ஊதியமாக வழங்குவர் என்பதால், அவர்களுக்கும் கூடுதல் வருமானம் பெற வாய்ப்புண்டு.
அத்திக்கடவு திட்டத்தை கொண்டு வந்தது மட்டுமின்றி, அத்திட்டத்தால் ஏற்படும் சாதக, பாதகங்களை அறிந்து, அதற்கும் திட்டம் இயற்றினால் மட்டுமே, திட்டத்தின் பயன், மக்களை முழுமையாக சென்றடையும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.