/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம், குட்டைக்கு தண்ணீர் செல்வது பாதிப்பு; சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம்
/
குளம், குட்டைக்கு தண்ணீர் செல்வது பாதிப்பு; சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம்
குளம், குட்டைக்கு தண்ணீர் செல்வது பாதிப்பு; சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம்
குளம், குட்டைக்கு தண்ணீர் செல்வது பாதிப்பு; சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம்
UPDATED : ஜூலை 12, 2025 05:02 AM
ADDED : ஜூலை 12, 2025 12:37 AM

அவிநாசி; மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை பணியில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்கள் உடைப்பு. குளங்களுக்கு நீர் வரத்து பாதிப்பு.
கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாக அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், விவசாய நிலங்கள் பரவலாக பசுமை செழிப்புடன் இருக்கிறது.
இந்நிலையில், அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த ஒரு சில மாதங்களாக நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலையோரம் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. கட்டட ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் பாலங்களும், கல்வெர்ட் எனும் சிறிய தரை மட்ட பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, நம்பியாம்பாளையத்தில் சாலை அகலப்படுத்தும் பணியில், பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில், நம்பியாம்பாளையம் பஸ் ஸ்டாப்பிலும், அனந்தகிரிக்கு முன்பாகவும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சேவூர் அருகே அசநல்லிபாளையம் மெயின் வால்வில் இருந்து, நம்பியாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் வஞ்சிபாளையம் வரை உள்ள 64 சிறு குளங்களுக்கு இந்த குழாய்கள் வழியாகவே தண்ணீர் செல்கிறது.
பாலம் கட்டும் பணிக்காக குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாத காலமாக குளங்களுக்கு நீர் வரத்து செல்லாததால் குளத்தின் நீர்மட்டம் சரிய துவங்கி உள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கும்
இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு நிர்வாகி அனந்தகிரி சம்பத்குமார் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் பல இடங்களில் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. நம்பியாம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக உடைக்கப்பட்ட குழாய்களை இணைக்காமல் உள்ளதால் குளங்களுக்கு நீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை நம்பி விவசாய விளை நிலங்களில், பலவகையான பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலமை கேள்விக்குறியாகி உள்ளது. விதைகள், உரம், விவசாய தொழிலாளர்களுக்கு கூலி என பல வகையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நெடுஞ்சாலை துறையே பொறுப்பு
அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட அலுவலர்களிடம் கேட்டதற்கு, 'நான்கு வழிச்சாலை பணிகளில் அத்திக்கடவு குழாய்கள் சேதத்திற்கான மதிப்பீடு வரையறை செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறையினருக்கு திட்டம் துவங்கும் முன்பே அனுப்பப்பட்டுள்ளது. குழாய்கள் சேதம் அடைந்தால் நெடுஞ்சாலைத்துறை தான் சரி செய்து தர வேண்டும்,' என்றனர்.
பணம் செலுத்தி விட்டோம்
தமிழக நெடுஞ்சாலை துறையின் திருப்பூர் கோட்ட பொறியாளர் ரத்தினசாமியிடம் கேட்டபோது, ''அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை திட்டத்தில், திருப்பூர் மாவட்ட எல்லையான, 13 கி.மீ., வரை, 15 இடங்களில் கல்வெர்ட் எனப்படும் சிறு பாலங்கள் கட்டப்படுகிறது. அந்த பணிகளின் போது, சேதமாகும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களுக்கு அதற்குரிய இழப்பீடு தொகை, அத்திக்கடவு திட்டத்துறைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே செலுத்தப்பட்டு விட்டது,'' என்றார்.