/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடுதளம் இல்லாமலே 'தடம்' பதிக்கும் வீரர்கள்
/
ஓடுதளம் இல்லாமலே 'தடம்' பதிக்கும் வீரர்கள்
ADDED : டிச 18, 2024 11:02 PM

திருப்பூர்; மாநில, தேசிய அளவிலான தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் திருப்பூர் வீரர்கள் தடம் பதித்து வரும் நிலையில், அதற்கான பயிற்சி பெறுவதற்கான ஓடுதளம் மற்றும் ஆடுதளம் அமைக்கும் பணியை, துணை முதல்வர் உதயநிதி முடுக்கிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சமீப ஆண்டுகளாக விளையாட்டுத்துறையில் ஏராளமானோர் சாதித்து வருகின்றனர். தடகளம், கபடி, புதிய விளையாட்டு, சிலம்பம் என பல்வேறு விளையாட்டுகளில், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தடம் பதித்து வருகின்றனர்.
விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக, 9 கோடி ரூபாய் திரட்டவும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மைதானம் அமைக்கும் பணியில் தொய்வு நீடிக்கிறது.
காரணம் என்ன?
அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட, 9 கோடி ரூபாயில், ஓடுதளம், ஆடுகளம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்தாமல், அவசர கதியில் பார்வையாளர் மாடம் (கேலரி)யை கட்டிவிட்டனர். மைதான கட்டமைப்பு பணிக்கு, மக்களின் பங்களிப்பு தொகைக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது; ஆனால், பங்களிப்பு தொகைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இதனால், கட்டுமானப் பணியில் தொய்வு தென்படுகிறது. விளையாட்டுத்துறை பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் உதயநிதி, மைதான கட்டமைப்புப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.