/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்களிடம் வழிப்பறி; பெண் கும்பல் 'அட்ராசிட்டி'
/
ஆண்களிடம் வழிப்பறி; பெண் கும்பல் 'அட்ராசிட்டி'
ADDED : ஆக 31, 2025 04:10 AM
திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் ரோட்டில் நடந்து செல்லும் ஆண்களிடம் பெண் கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பயணிகளை நோட்டமிட்டு சில பெண் கும்பல்கள் கைவரிசை காட்டி வருகின்றன. தனியாக நிற்கும் ஆண் பயணி, போதை ஆசாமிகளை மதுக்கடை அருகே அழைத்து சென்று, மிரட்டி பணம், மொபைல் போன்களை பறித்து செல்வது தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக, அவ்வப்போது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் மீண்டும் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். கடந்த, 12ம் தேதி பஸ் ஸ்டாண்ட் பின் காமாட்சி அம்மன் கோவில் வீதியில், நான்கு பெண்கள், ஆண் ஒருவர் அடங்கிய கும்பல் ஒன்று ரோட்டோரம் அமர்ந்து கொண்டு நள்ளிரவில் ரோட்டில் நடந்து செல்பவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டு, உடைமைகளை பறிக்க முயன்றனர்.
ரோட்டோரம் படுத்திருந்த போதை ஆசாமிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். ரோட்டில் அமர்ந்து மது அருந்த அந்த கும்பல், பாதசாரிகளிடம் 'அட்ராசிட்டி'யில் ஈடுபட்டனர். இதுதொடர்பான 'சிசிடிவி' பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திருப்பூர் தெற்கு போலீசார், அட்டகாசம் செய்யும் அந்த பெண்கள் கும்பலை தேடி வருகின்றனர்.

