/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிசை அமைக்க முயற்சி; அதிகாரிகள் எச்சரிக்கை
/
குடிசை அமைக்க முயற்சி; அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : டிச 11, 2025 04:55 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கருப்பண்ணசாமி நகர் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சிலர் அத்துமீறி குடிசை அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நேற்று காலை, இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'இங்கு வசிக்கும் பலரின் வாரிசுகள் வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், வேறு பகுதியில் இருந்து வந்த சிலர் இங்கு குடிசை அமைக்க முயற்சிக்கின்றனர்' என, ஒரு தரப்பினர் புகார் அளித்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, இனி, அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால், காலியாக உள்ள இடத்தில் நாங்களே குடிசை அமைக்க முயன்றோம்' என, மற்றொருதரப்பினர் கூறினர்.
ஆய்வு மேற்கொள்ள வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே முறையாக பட்டா பெற்றவர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும். காலி இடம் இருந்தால், ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், பட்டா ஒதுக்கப்படும்.
விதிமுறை மீறி அரசு நிலத்தை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை இல்லை. பட்டா உள்ளவர்களை தவிர, மீதமுள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில், அகழ் இயந்திரம் உதவியுடன் நாங்களே அகற்ற வேண்டி இருக்கும்' என்றனர்.

