/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
250 விவசாயிகளுக்கு தானியங்கி பம்ப்செட்
/
250 விவசாயிகளுக்கு தானியங்கி பம்ப்செட்
ADDED : ஜன 01, 2025 05:31 AM
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
மாநில அரசு வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்க, வேளாண் பொறியியல் துறை வாயிலாக வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதுடன், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் வழி வகுக்கப்படுகிறது.
நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், வேளாண் உழவர் நலத்துறையில், விவசாயிகளுக்கு, மானிய விலையில் மொபைல் போன் வாயிலாக இயங்கும் தானியங்கி 'பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி, 'ரிமோட் கன்ட்ரோல் பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி ஆகியவை வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சம், 7,000 ரூபாய், அல்லது கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம், இவற்றில் எந்த தொகை குறைவோ, அதில் சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பிற விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில், 40 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 'ரிமோட் கன்ட்ரோல் பம்ப் செட்' கட்டுப்படுத்தும் கருவி, 250 எண்ணிக்கையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்கள் 94437 51142 (திருப்பூர்), 94437 78124 (தாராபுரம்), 96001 59870 (உடுமலை) என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

