/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடைக்கும் தீர்வு; மனுக்களுடன் மக்கள் நம்பிக்கை
/
கிடைக்கும் தீர்வு; மனுக்களுடன் மக்கள் நம்பிக்கை
ADDED : ஏப் 29, 2025 06:37 AM

திருப்பூர்:
கலெக்டரின் நேரடி கவனத்துக்கு கொண்டுசென்றால் தங்கள் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையில், குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள், அமைப்பினர் பிரச்னைகளை குறிப்பிட்டு குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். முகாமில், மொத்தம் 494 மனுக்கள் பெறப்பட்டன.
நாய் வளர்ப்போர்
இடையூறு தரலாமா?
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
பெருமாநல்லுார், இடுவம்பாளையம், முத்துநகர் பகுதிகளில் அரசு துறையில் உரிய அனுமதி பெறாமல் நாய் வளர்க்கின்றனர். முறையாக தடுப்பூசியும் செலுத்துவதில்லை. இனவிருத்திக்காக நாய் வளர்ப்போர், அவற்றை சரிவர பராமரிப்பதும் இல்லை. நாய்களின் சிறுநீர் மற்றும் கழிவுநீரை குடியிருப்பு பகுதி நடைபாதையில் விடுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக நாய் வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலவச மனை
வழங்குங்கள்
அன்னை சகோதர சமுதாய அறக்கட்டளை சார்பில், கோம்பை தோட்டம், பெரிய கடை வீதி, விஜயாபுரம், ஹவுசிங் யூனிட் பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளியில்
மைதானம் இல்லை
பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம், நாகலிங்கபுரம் அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வந்து மனு அளித்தனர். மாணவர்கள் கூறியதாவது:
நாகலிங்கபுரம் அரசு நடுநிலை பள்ளியில், மாணவ, மாணவியர் 150 பேர் படிக்கிறோம். எங்கள் ஊரிலும், பள்ளியிலும் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை; பெரியவர்கள் நடைபயிற்சி செல்லமுடிவதில்லை. எங்கள் பள்ளி மற்றும் ஊர் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் அமைத்துத்தரவேண்டும்.
ஐகோர்ட் உத்தரவிட்டும்
பட்டா மறுக்கலாமா?
அறிவொளி நகர் ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
பல்லடம் தாலுகா, கல்லம்பாளையத்தில், 24 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, கலெக்டர் பலமுறை உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், பல்லடம் தாசில்தார் பட்டா வழங்க மறுக்கிறார். இதுதொடர்பாக 2019ல் தொடரப்பட்ட வழக்கில், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஐந்து நபர்கள் அந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, தகுதியானோருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விடுபட்டவர்களுக்கும்
பட்டா வழங்க வேண்டும்
திருப்பூர் மாநகராட்சி 39வது வார்டு, ஆண்டிபாளையம், அண்ணா நகர் பகுதியில், 50 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களில், 14 பேருக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 36 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க கோரி குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
----------
3 படங்கள்
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மனு அளித்த ஆண்டிபாளையம், அண்ணா நகர் பகுதி மக்கள்;
அன்னை சகோதர சமுதாய அறக்கட்டளையினர்; பட்டம்பாளையம் பகுதி மக்கள்.

