ADDED : மே 07, 2025 02:06 AM
திருத்தேர் என்பது கோவிலுக்கு இணையானது...
வேத ஆகம பாடசாலை முதல்வர், சுந்தரமூர்த்தி சிவம் கூறியதாவது:
கோவில் கட்டி கும்பாபிேஷகம் நடத்துவது மட்டுமல்ல, ஒவ்வொரு உற்சவத்தை விமரிசையாக நடத்தினால் தான் இறையருளை பரிபூரணமாக பெற முடியும். அதுபோல், பன்னெடுங்காலமாக அவிநாசியில், சித்திரைத்தேர் உற்சவம் நடந்து வருகிறது. வேதாம முறைகளின்படி பூஜைகள் செய்து, எம்பெருமானும், அம்மனும், தினமும் வாகன காட்சியில் திருவீதியுலா வந்து மக்களை காக்கின்றனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டை தொடர்ந்து, சுவாமி திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.
திருத்தேர் என்பது, கோவிலைக்கு இணையானது; கோவிலில் உறைந்துள்ள இறைவன், சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்து, சோமஸ்கந்தர் ரூபமாக, மக்களை தேடிச்சென்று அருள்பாலிப்பதே தேர்த்திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா உற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. சுவாமியின் அனுக்கிரகத்தை பெறும் வழிபாடாக, உற்சவம் கொண்டாடப்படுகிறது.
அவிநாசியை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும், சமுதாய மக்கள் மண்டப கட்டளை நடத்தி, எவ்வித வேறுபாடும் இல்லாமல், ஊர்கூடி தேர் இழுத்து திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். தேர்த்திருவிழா நடத்துவதால், காலகாலத்துக்கும் நன்மை பெருகும்; தேர்த்திருவிழாவின் போது, தேரின்மீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவனை தொழுவது, பல கோடி நன்மைகளை வாரிக்கொடுக்கும். மனதில் அமைதி பிறந்து, வீடும், நாடும் மக்களும் ஆனந்தமாக வாழ்வார்கள்.
குறிப்பாக, சோமாஸ்கந்த மூர்த்தியாக தரிசனம் செய்யும் போது, மனதில் வேண்டியது நிச்சயம் நிறைவேறும். காசி தீர்த்தம், அவிநாசி திருத்தலத்தில் இருப்பதால், இக்கோவில் தேர்த்திருவிழாவில் வழிபடுவதால், பாவங்களை போக்கி இறையருள் பெறலாம்.
சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாய் பிள்ளையை அழைத்தார். அருணகிரிநாதர், அவிநாசி செந்திலாண்டவருக்கு திருப்புகழ் பாமாலை சூட்டி வழிபட்டுள்ளார். பக்தர்களுக்கு கருணை மழை பொழிவும் கருணாம்பிகை அம்மன் இறைவனுக்கு வலப்பாகம் அமர்ந்து அருளாட்சி புரிகிறாள். ஒவ்வொரு மனிதரும், தங்களது வாழ்வில் பிறவி பயனை அடைய, சொந்த ஊரில் நடக்கும் கோவில் உற்சவத்தை கண்டிப்பாக கொண்டாட வேண்டுமென, சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கடந்த, 1985ம் ஆண்டு முதல், ஒவ்வொரு தேர்த்திருவிழாவின் போதும், வேதபாடசாலை மாணவர்கள் குழு, கோவிலில் சிறப்பு வேள்வி பூஜைகளை நடத்தி, இறைவனைக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். அரிய பொருளாகிய அவிநாசியப்பர், நாடி வரும் மக்களுக்கு நற்கருணை பொழியும் கருணாம்பிகை அம்மனும், திருத்தேரில் வீற்றிருந்து உற்சாகம் பொங்க உலா வரும் காட்சியை பார்த்து, வணங்கி பிறவிப்பயனை அடையலாம்!
இவ்வாறு அவர் கூறினார்.