/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ரிதன்யா வழக்கு; சமூக நலத்துறை விசாரணை
/
அவிநாசி ரிதன்யா வழக்கு; சமூக நலத்துறை விசாரணை
ADDED : ஆக 26, 2025 11:38 PM
திருப்பூர்; அவிநாசி ரிதன்யா தற்கொலை தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரிகள், நேற்று முதல் விசாரணை துவக்கியுள்ளனர்.
அவிநாசியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா,27. இவர், கடந்த மே, 28ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சனை கொடுமையால், திருமணமான 78 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்த சம்வபம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் மற்றும் கணவரின் பெற்றோரே தற்கொலைக்கு காரணம் என, தனது பெற்றோரின் மொபைலுக்கு ரிதன்யா 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேவூர் போலீசார், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மூவரும், சென்னை ஐ கோர்ட்டில் ஜாமின் பெற்று வெளியேவந்துள்ளனர். இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
சமீபத்தில் திருப்பூருக்கு வந்த மகளிர் ஆணைய தலைவர் குமாரி, ரிதன்யா வழக்கை சமூக நலத்துறை விசாரிக்கும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், ரிதன்யா வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
இதற்காக, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர், ரிதன்யாவின் பெற்றோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். ரிதன்யா தற்கொலை, வரதட்சனை கொடுமை தொடர்பான ஆதாரங்களை, நாளை நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினர்.