/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் ததும்பும் தண்ணீர்; வலுவிழந்த சுற்றுச்சுவரால் ஆபத்து
/
அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் ததும்பும் தண்ணீர்; வலுவிழந்த சுற்றுச்சுவரால் ஆபத்து
அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் ததும்பும் தண்ணீர்; வலுவிழந்த சுற்றுச்சுவரால் ஆபத்து
அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் ததும்பும் தண்ணீர்; வலுவிழந்த சுற்றுச்சுவரால் ஆபத்து
ADDED : நவ 01, 2024 10:50 PM

அவிநாசி ; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளம் நிரம்பியது. அளவுக்கதிமாக தண்ணீர் தேங்குவதால், சுற்றுச்சுவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அவிநாசி கோவில் தலபுராணத்தில் இடம் பெற்ற தாமரைக்குளத்தில் இருந்து, கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்துக்கு ஊற்று வாயிலாக, தண்ணீர் வருகிறது. அவ்வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெய்த கனமழையால், தெப்பக்குளம் முற்றிலும் நிரம்பியது.
படித்துறை முற்றிலும் தண்ணீர் மூடியதால், கடந்தாண்டு ராட்சத மோட்டார் வைத்து, தண்ணீர் தொடர்ந்து, 24 மணி நேரமும் வெளியேற்றப்பட்டது. இருப்பினும், கும்பாபிேஷகத்துக்கு பின், எட்டு மாதங்களாக நீரை வெளியேற்றவில்லை. இதனால், கொள்ளளவை காட்டிலும், பல அடி உயரத்துக்கு தற்போது தண்ணீர் ததும்பி நிற்கிறது.
பாசி படர்ந்து தெப்பக்குளத்தில் உள்ள நீர் அசுத்தமாகி இந்தாண்டில் மட்டும் நான்கு முறை மீன்கள் இறந்தன. ஒரு சில மாதங்களுக்கு முன் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழை காரணமாக, குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்து குளத்தின் மதில் சுவர் மேல் விழுந்தது.
அப்போது அதில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு கம்பிகள், மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்தது. அதனை தற்போது வரை கோவில் நிர்வாகம் சீரமைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் அதிகளவில் உள்ளதால், சுற்றுச்சுவரில் நீர் கசிவு ஏற்பட்டு வலுவிழந்து காணப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மேல் சாய்ந்து குளத்தில் உள்ள நீர் காகங்கள், வாத்து, மீன்களை பார்த்து ரசிக்கின்றனர். வலுவிழந்த சுற்றுச் சுவர் எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான சூழ்நிலை உள்ளது. பக்தர்கள் மீன்களுக்கு இரை போடுவதற்காக வீசும் பொரி உட்பட தின்பண்டங்கள், பாலிதீன் கவர்கள் குளத்தில் மிதக்கிறது.
இதனால், தண்ணீர் அசுத்தமாகவும் துர்நாற்றத்துடன் உள்ளது. எனவே, தெப்பக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தி புதிய நீர் நிரம்ப கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் கூறுகையில், ''தெப்பக்குளத்தில் உள்ள மோட்டார் பழுதாகி உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மோட்டார் சரி செய்யப்பட்டு நீரை வெளியேற்றும் பணிகள் துவங்கும்.
சுற்றுச்சுவர் பராமரிப்பிற்காக எஸ்டிமேஷன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், மராமத்து பணிகள் துவங்கும்,'' என சமாளித்தார்.