/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா செல்லும் போது பாலிதீன் தவிர்க்கலாமே!
/
சுற்றுலா செல்லும் போது பாலிதீன் தவிர்க்கலாமே!
ADDED : செப் 28, 2025 04:49 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.
அதில், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசியதாவது:
நம் மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சுற்றுலாக்கள் உள்ளன. சுற்றுலா தலங்கள் எல்லாம் வெறும் பொழுது போக்கு தலங்கள் மட்டுமல்ல. நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் மையங்கள். நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை நமக்கு கற்பிக்கும் வகுப்பறைகள். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதன் மூலம் அதனை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், சுக்ரீஸ்வரர் கோவில், அமராவதி முதலைப்பண்ணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றுலா தலங்களாக உள்ளன. சுற்றுலா செல்வோர் அந்த தலத்தின் சிறப்புகளை அறிய வேண்டும்; அங்கு கிடைக்கும் அனுபவங்களைப் பெற்று மகிழ வேண்டும். மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்து இயற்கையோடு ஒன்றிணைய வேண்டும். வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துதல், அவற்றுக்கு உணவளித்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மாணவ பிரதிநிதி நவீன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் ரேவதி, லோகேஸ்வரி, பிரியங்கா ஆகியோர் தலைமையில் மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.