/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜிப்லி ஆர்ட்டில்' விழிப்புணர்வு
/
'ஜிப்லி ஆர்ட்டில்' விழிப்புணர்வு
ADDED : மே 10, 2025 02:39 AM

திருப்பூர், : திருப்பூரில் நடை பெறும் ஆதார் சிறப்பு முகாம் குறித்து, புதுமையான வகையில், 'ஜிப்லி ஆர்ட்' உருவாக்கி, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருப்பூரிலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் உள்ளன. வார வேலை நாட்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்வது சிக்கலாகிறது.
மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும்வகையில், சுழற்சி முறையில், வாரம் ஒரு தாலுகா அலுவலக ஆதார் மையம், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை செயல்படுகிறது.
காலை முதல் மாலை வரை சிறப்பு முகாம் நடத்தி, ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம், பயோமெட்ரிக் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் நாளை(11ம் தேதி), திருப்பூர் - குமரன் ரோட்டிலுள்ள வடக்கு தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்கவேண்டும் என்பதற்காக, அரசு கேபிள் டிவி பிரிவினர், அனை வரையும் கவரும் வகையில் 'ஜிப்லி ஆர்ட்' விழிப்புணர்வு போஸ்டர் தயாரித்துள்ளனர்.
'கம்பெனியில் வாரம் முழுக்க வேலை இருக்கு; என்னோட ஆதார் அப்டேட் பண்ணவே முடியலை; குழந்தைக்கும் ஆதார் எடுக்க முடியலை' என பெண் ஒருவர் கவலை அடைகிறார். அவரது தோழி, வார விடுமுறை நாளில் நடைபெறும் ஆதார் சிறப்பு முகாம் குறித்து தெரிவிப்பது போன்று, ஜிப்லி ஆர்ட் கார்ட்டூன்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த டிஜிட்டல் ஜிப்லி ஆர்ட் கார்ட்டூன்களை, மொபைல் போனில் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.