/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுப்பதிவு குறைந்த சாவடிகளில் விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவு குறைந்த சாவடிகளில் விழிப்புணர்வு
ADDED : ஜன 14, 2024 02:22 AM
திருப்பூர்:கடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில், வாக்காளர் விழிப்புணர்வு வாகன பிரசாரம், வரும் 25ம் தேதி முதல் துவங்குகிறது.
பிப்., இறுதிவாக்கில், லோக்சபா தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர் இறுதி பட்டியல், வரும் 22 ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், தேசிய வாக்காளர் தினம், 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமே, லோக்சபா தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை, தேர்தல் கமிஷன் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் துவங்குகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், பயிற்சிக்கான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் கூடிய வாகன பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தொகுதியின் சராசரி ஓட்டுப்பதிவை காட்டிலும் குறைவான ஓட்டு பதிவாகியுள்ள, ஓட்டுச்சாவடிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
தேசிய வாக்காளர் தினத்தில் இருந்து, சட்டசபை தொகுதி வாரியாக, விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்குகிறது. வாக்காளர் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்வது குறித்தும் வாக்காளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கடந்த தேர்தலில், சராசரி ஓட்டுப்பதிவை காட்டிலும் குறைவான ஓட்டுப்பதிவான சாவடிகளை கண்டறிந்து, அப்பகுதி வாக்காளருக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாகன பிரசாரம், லோக்சபா தேர்தல் அறிவிக்கும் நாள் வரை தொடர வேண்டுமென, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

