/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபாவில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
/
கிராம சபாவில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 29, 2025 11:27 PM
திருப்பூர்: உலக தண்ணீர் தின கிராமசபாவில், மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில், ஊராட்சிகளில் கிராம சபா நடத்தப்பட்டு வந்தது; கடந்த சில ஆண்டுகளாக, உலக தண்ணீர் தினத்திலும் (மார்ச் 22) கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது.
இத்துடன், உள்ளாட்சி (நவ., 1) தினத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது.கடந்த, 22ம் தேதிக்கு பதிலாக, உலக தண்ணீர் தின கிராம சபா கூட்டம், நேற்று, தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடந்தது.
மொத்தம், 19 ஆயிரத்து, 565 ஆண்கள்; 26 ஆயிரத்து, 327 பெண்கள் என, 45 ஆயிரத்து, 892 பேர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 4,452 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவில், கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; மழைநீர் சேகரிப்பு; உறிஞ்சு குழி அமைத்து, நிலத்தடி நீரை செறிவூட்டுவது குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கனவு இல்லம் திட்டத்தில், 2025-26ம் ஆண்டில், வீடு கட்டும் பயனாளிகள் பட்டியல், முதல்வரின் வீடு மறுகட்டமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல், கிராம சபாவில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
அத்துடன், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2ல், வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளும் ஊராட்சிகள் மற்றும் அதன் விவரங்கள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான, 13 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., வேலுசாமி மற்றும் பற்றாளர்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சென்று, கிராம சபா கூட்டங்களை நடத்தினர்; 13 ஊராட்சிகளிலும், கிராம சபா நடந்தது.
மொத்தம், 1,355 ஆண்கள், 1392 பெண்கள் என, 2,747 பேர் பங்கேற்றனர்; மொத்தம், 209 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.