ADDED : ஜூலை 31, 2025 11:21 PM
திருப்பூர்; திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தை 'திடப்படுத்தும்' நோக்கில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில், குப்பையை தரம் பிரித்து வழங்கும் செயலை ஊக்குவிக்கும் பணியை 'துப்புரவாளன்' அமைப்பு வேகப்படுத்தியுள்ளது.
திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் குப்பை மேலாண்மை என்பது, பெரும் சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது.
குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை களாக தரம் பிரித்து வழங்க வேண்டியது பொதுமக்களின் கடமை; அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டியது, உள்ளாட்சி நிர்வாகங்களின் கடமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள துப்புரவாளன் அமைப்பினர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகின்றனர். இப்பணியை பரவலாக்கும் முயற்சியாக, யங் இந்தியா மற்றும் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்புடன் இணைந்து, கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். யங் இந்தியா அமைப்பின் நேதாஜி, சக்தி மிருதுளா, துப்புரவாளன் அமைப்பின் பத்மநாபன் மற்றும் கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வீரபாண்டி பாரதி ரோட்டரி சார்பில், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வழங்க, குப்பைத்தொட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டு, கல்லுாரியில் ஆங்காங்கே வைக்கப்பட்டன.
பசுமையாக்க ஒரு முயற்சி துப்புரவாளன் அமைப்பினர் கூறுகையில், ''தற்போது, குப்பை பிரச்னையின் தீவிரம் குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தை பசுமையானதாக மாற்றும் முயற்சியாக, உலர்ந்த பாலிதீன் கவர், பாட்டில் உள்ளிட்ட பொருட்களை தனியாக சேகரித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியை நாங்கள் மேற்கொள்வோம். இந்த முயற்சி வெற்றி பெற்றவுடன் கல்லுாரி வளாகத்தில் சேரும் இலை, தழை உள்ளிட்ட குப்பைகள், உணவுக்கழிவுகளை மக்க செய்து, உரமாக மாற்றுவது குறித்த பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி, கல்லுாரிகள் தோறும் இந்த விழிப்புணர்வு வழங்க தயாராக உள்ளோம்,'' என்றனர்.