ADDED : செப் 02, 2026 07:12 PM
திருப்பூர், செப். 3–
மாணவர்களின் தவறான செயல்பாடுகளால் பள்ளியின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, குறிப்பிட்ட சில மாணவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாக திருப்பூர் நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
நஞ்சப்பா பள்ளியில் படிக்கும் நாங்கள், கடந்த ஆக. 18ம் தேதி நடைபெற்ற மண்டல அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க சென்றோம். ஆனால், பள்ளி தலைமை ஆசிரியர் எங்களை விளையாட அனுமதிக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, எங்களை அவமதிக்கும் வகையில் பேசினார். விளையாட்டில் பங்கேற்க தடை விதித்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியர் கர்னலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில மாணவர்கள் குழுவாக செயல்பட்டு, பள்ளி வளாகத்திலேயே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் உள்ளது.
கபடி போட்டியில் தோல்வியடைந்தால் பிரச்னையில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதனால், பள்ளியின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில், அந்த மாணவர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு சில ஆசிரியர்களே துாண்டுதலாக செயல்பட்டு, பொய் புகார்களுக்கு ஆதரவளிப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
