ADDED : ஜன 05, 2024 01:13 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி சார்பில், அதிக வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்துள்ள ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால், குமரன் ரோடு, புஷ்பா சந்திப்பு, காங்கயம் ரோடு நல்லுார், பார்க் ரோடு ஆகிய இடங்களில் இது போன்ற நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமேம்பாலங்கள், பாதசாரிகள் கடந்து செல்ல பயன்படுத்துவதை விட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தங்கள் விளம்பர பேனர்களை அமைத்துக் கொள்ள பயன்படுத்துகின்றனர். எந்த பாகுபாடும் இன்றி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இவற்றின் கூட்டணி கட்சியினர், லெட்டர் பேடு கட்சியினர், அமைப்புகள் என பல தரப்பினரும் இந்த பாலங்களின் மீது பக்கவாட்டில் பேனர்களை அமைத்து விடுகின்றனர்.
இது போன்ற பேனர்கள், முறையாக பொருத்தப்படாமல், பலத்த காற்று மற்றும் மழையின் போதோ கழன்று விழும் ஆபத்து உள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனத்தை திசை திருப்பும் ஆபத்தும் உள்ளது.
எனவே, இது போன்ற விளம்பர பேனர்கள் அமைப்பதை தடுக்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.