/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை; சடலத்தை பெற மறுத்து மறியல்
/
பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை; சடலத்தை பெற மறுத்து மறியல்
பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை; சடலத்தை பெற மறுத்து மறியல்
பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை; சடலத்தை பெற மறுத்து மறியல்
ADDED : ஜூலை 18, 2025 11:53 PM

திருப்பூர்; அனுப்பர்பாளையத்தில் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தைப் பெற மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வளையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 42. கடந்த 15ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் வேலை செய்த நிறுவனத்தில் பனியன் துணிகள் திருடு போனது தொடர்பாக அவரை நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் அடித்து, மிரட்டல் விடுத்ததாகவும், அவர் பெற்றோர் பெயரில் இருந்த இடத்தை மிரட்டிப் பறித்துக் கொண்டதாகவும் தயாளன் குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர்.
இதனால் மனமுடைந்த அவர் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.
தயாளன் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று அவரது சடலத்தைப் பெற மறுத்து மருத்துவமனை வாயிலில், தாராபுரம் ரோட்டில் அமர்ந்து மறியல் நடந்தது. வி.சி.க., மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில துணை செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் தயாளன் குடும்பத்தினர் இம்மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடந்தது. தயாளன் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; இதில் தொடர்புடையோர் அழைத்து விசாரணை நடத்தப்படும்; தயாளன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பின் தயாளன் சடலத்தை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தால் நேற்று மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.