/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாய் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம்
/
பி.ஏ.பி., கால்வாய் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம்
பி.ஏ.பி., கால்வாய் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம்
பி.ஏ.பி., கால்வாய் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம்
ADDED : நவ 13, 2025 11:21 PM

பல்லடம்:பல்லடம் அருகே, பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, வாவிபாளையம் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுாகா, வாலிபாளையம் ஊராட்சி பகுதி வழியாக, பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தின் (பி.ஏ.பி.) கீழ், பி.ஏ.பி. பிரதான வாய்க்கால் செல்கிறது. சமீபத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்காக இதில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை. 8.00 மணியளவில் வாய்க்காலின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
குடியிருப்பு பகுதியில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி அங்கிருந்த நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வாய்க்கால் உடைந்த பகுதியில், ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கூடினர். முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தண்ணீர் மேலும் ஊருக்குள் புகாதவாறு, விவசாயிகளே மண் தடுப்பு ஏற்படுத்தினர். தகவலறிந்த கலெக்டர் மணீஷ் நாரணவரே, வாலிபாளையம் சென்று ஆய்வு செய்து விவசாயிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., வாய்க்கால், 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. இங்குள்ள பிரதான வாய்க்காலின் பல இடங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு, இன்று (நேற்று) உடைப்பு ஏற்பட்ட பகுதி மிகவும் சேதமடைந்து வலுவிழந்து காணப்படுவதாக அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளோம்.
சமீபத்தில் பெயரளவுக்கு இப்பகுதியில் வாய்க்கால் பராமரிக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முழு காரணம். வாய்க்கால் உடைந்ததன் காரணமாக, 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், விவசாய நிலங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இது இரவு நேரத்தில் ஏற்பட்டிருந்தால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

