sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பி.ஏ.பி., கால்வாய் மேம்பாடு: ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை; குறைகேட்பு கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

/

பி.ஏ.பி., கால்வாய் மேம்பாடு: ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை; குறைகேட்பு கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

பி.ஏ.பி., கால்வாய் மேம்பாடு: ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை; குறைகேட்பு கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

பி.ஏ.பி., கால்வாய் மேம்பாடு: ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை; குறைகேட்பு கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்


ADDED : மே 31, 2025 05:19 AM

Google News

ADDED : மே 31, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; உப்பாறு அணைக்கு உயிர்நீர்; பி.ஏ.பி., பாசன கால்வாய்களை துார்வாருவது, உள்பட, மாவட்டத்தில் வேளாண் செழிக்க, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, குறைகேட்பு கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பட்டியலிட்டு பேசினர்.

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கிஷான் மோட்சா மாநில செயலாளர், மவுனகுருசாமி:

பி.ஏ.பி., உடுமலை பகிர்மான கால்வாய், கடந்த மூன்று ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. உடுமலை வாரச்சந்தையில், விவசாயிகள் அல்லாதவர்களின் ஆடு, கோழிக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகள் மேற்கொள்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கவேண்டும்.

உப்பாறு ஓடை உள்பட பல்வேறு ஓடைகளில், அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன; அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

நமது மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு அதிகளவு உள்ளது. எனவே, தென்னை விவசாயிகளுக்கும், உழவு மானியம் வழங்க வேண்டும்.

உயிர் நீர் தேவை


தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதா; அல்லது தட்கலில் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளதா என, கடந்த மாத குறைகேட்பு கூட்டத்திலேயே கேள்வி எழுப்பினோம். மின்வாரிய அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை.

தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. தென்னை மரங்களை ஒட்டிச் செல்லும் சாதாரண மின்கம்பிகளை மாற்றி, பாதுகாப்பான கம்பிவடங்கள் அமைக்கவேண்டும்.

உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் வறட்சியின் பிடியிலேயே உள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னரே துவங்கியுள்ளது. அணைகள் நிரம்பியுள்ளன. எனவே உப்பாறு அணைக்கு உயிர்நீர் வழங்கவேண்டும். மின்வாரிய அதிகாரிகள், 'நடப்பு ஆண்டு விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான இலக்கு வெளியிடப்படவில்லை. அரசு அறிவிப்பு வந்த உடன், இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ஏ.பி., அதிகாரிகள், 'பி.ஏ.பி., ல் நான்காவது நனைப்பு பாசனத்துக்கு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. ஐந்து சுற்றுக்கள் முடிந்தபின், அணைகளின் இருப்பை பொறுத்து, அரசிடம் அனுமதியுடன், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்படும்' என பதிலளித்தனர்.

துார்வார நிதி வேண்டும்


அலங்கியம் விவசாயி பழனிசாமி:

அமராவதி அணை, இன்னும் ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடுமலையில் உள்ள வாய்க்கால்களுக்கு, ஜூன் முதல் வாரத்திலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

மழை காரணமாக, தாராபுரத்தில், அலங்கியம், தளவாய்பட்டணம், கொழிஞ்சிவாடி வாய்க்கால்களுக்குள் மண் விழுந்து காணப்படுகிறது. வாய்க்கால்களை துார்வார, முன்னரே நிதி ஒதுக்கவேண்டும்.

பி.ஏ.பி., மேம்பாடுநிதி ஒதுக்கவில்லை


பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் கோபால்:

காவிரி பாசன மேம்பாட்டுக்காக, அரசு ஆண்டு தோறும் 70 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்கிறது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில், பாசன கால்வாய்களை துார்வாருவதற்காக, அமைச்சரவை கூடி முடிவெடுத்து, அந்த விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்கின்றனர்.

ஆனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகளை மட்டும், அரசு, மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. தமிழக பட்ஜெட்டில், பி.ஏ.பி., பாசன மேம்பாட்டுக்காக, ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யாதது மன வேதனை அளிக்கிறது. பி.ஏ.பி., விவசாயிகளாகிய எங்கள் ஆதங்கத்தை, கலெக்டர், நிர்வளத்துறை அமைச்சர், முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

இவ்வாறு, விவசாய அமைப்பினர், பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து மொத்தம் 152 மனுக்கள் பெறப்பட்டன.

மத்திய வேளாண் அமைச்சகம், 'விக் ஷித் க்ரிஷ சங்கல்ப் அபியான்' என்கிற பெயரில், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில், வேளாண் நுட்பங்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, கடந்த 29ம் தேதி முதல் துவக்கியுள்ளது.

திருப்பூர் உள்பட நாடுமுழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வரும் 12 ம் தேதி வரை, வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 'வேளாண் வளர்ச்சி பிரசாரம்' குறித்து விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் பேனர் ஒட்டப்பட்டிருந்தது. நேற்று குறைகேட்பு கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, அலுவலர்கள் சிலர், இந்த பேனரை பெயர்த்தெடுத்து சென்றுவிட்டனர்.

இது, அரங்கிலிருந்த விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விழிப்புணர்வு பிரசாரம் தொடர்பான தகவலை அனைவரையும் சென்றடையச் செய்யவேண்டிய பொறுப்பு மிக்க அதிகாரிகள், மத்திய அரசு திட்டம் என்பதால், கண்டுகொள்ளாததாக ஆதங்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us