/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க ரோந்து போக மறந்துட்டாங்க! கண்காணிப்பு குழு அமைத்தும் பலனில்லை
/
பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க ரோந்து போக மறந்துட்டாங்க! கண்காணிப்பு குழு அமைத்தும் பலனில்லை
பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க ரோந்து போக மறந்துட்டாங்க! கண்காணிப்பு குழு அமைத்தும் பலனில்லை
பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க ரோந்து போக மறந்துட்டாங்க! கண்காணிப்பு குழு அமைத்தும் பலனில்லை
ADDED : செப் 25, 2024 08:35 PM

உடுமலை : பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க ஏற்படுத்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு ரோந்து செல்லாததால், பல்வேறு பாதிப்புகள் தொடர் கதையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இரண்டாம் சுற்றுக்கு பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பாசன காலம் துவங்கியது முதல், ஆயக்கட்டு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. எனவே, நிலைப்பயிர்களுக்கும், நீண்ட கால பயிர்களுக்கும் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உடுமலை வருவாய் கோட்டத்தில், பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களில், பாசன நீர் திருட்டு அதிகரித்துள்ளது. அனைத்து மடைகளிலும், நீர் நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டு, விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
விவசாயிகள் புகார்
மண்டல பாசனம் துவங்கும் முன் பாசன நீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை, மின்வாரியம், போலீஸ், வருவாய்த்துறை உள்ளடக்கிய சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இக்குழுவினர், தொடர் ரோந்து பணி மேற்கொள்ளவும், முறையற்ற வகையில், தண்ணீர் எடுப்பவர்களின் நிலங்கள், மின் இணைப்பு தொடர்பான விபரங்களை பொதுப் பணித்துறை நீர் வளத்துறையினருக்கு வழங்க வேண்டும்.
நீர் வளத்துறையினர் போலீசில் புகார் செய்து, முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், மின் இணைப்பு தொடர்பான விபரங்களுடன், மின்வாரியத்துக்கு தகவல் அளித்து, மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த் கண்ணன் வாயிலாக வெளியிடப்பட்டது.
உதாரணமாக, புதுப்பாளையம் கிளை கால்வாய்க்கு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயசேகரன்(பொ), வருவாய்த்துறை ஆய்வாளர் பாலாஜி, குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் கீதா, மின்வாரிய உதவி பொறியாளர் சத்தியவாணி உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
'கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணிகளை மேற்கொள்வதில்லை; கிளை கால்வாயில், பகல் நேரத்திலேயே மின்மோட்டாரை பயன்படுத்தி, நீர் திருடுகின்றனர்,' என விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதனால், அனைத்து பகிர்மான கால்வாய்களிலும் நீர் நிர்வாக பிரச்னைகள் அதிகரித்துள்ளது. வறட்சியான தருணத்தில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆயக்கட்டு நிலங்களுக்கு முழுமையாக பாசன நீர் கிடைக்க, கண்காணிப்பு குழுவினர் முறையாக ரோந்து சென்று, நீர் திருட்டை தடுக்க வேண்டும். மேலும், பாசன காலத்திலும், புதுப் பாளையம் கிளை கால்வாய்க்கு, பொதுப்பணித்துறையினர், பொறுப்பு அலுவலரை மட்டும் நியமித்துள்ளது வேதனையளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போல், பிற பாசன கால்வாய்களிலும், கண்காணிப்பு குழு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இப்படியும் செய்வாங்களா!
பாசன கால்வாயில் இருந்து கால்வாய் அருகில் குழாய் பதித்து, அது வழியாக பாசன நீரை திருடி வந்தனர். ஆனால், புதுப்பாளையம் கிளை கால்வாயில், மின்மோட்டாரை நேரடியாக கால்வாயில் போட்டு பகலிலேயே தண்ணீர் திருட முயற்சித்துள்ளனர்.
கால்வாயில் மின் வயர்கள் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தவர் கள், புகார் தெரிவித்த பிறகே கண்காணிப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
இதே போல், பகிர்மான கால்வாயிலும் நீர் திருட்டுக்காக மின்மோட்டாரை பயன் படுத்திய சம்பவமும் நடந்துள்ளது. இதனால், மின்விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.