/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள்; விரைவில் ஆலோசனை
/
பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள்; விரைவில் ஆலோசனை
ADDED : டிச 21, 2025 05:56 AM

திருப்பூர், : பி.ஏ.பி., திட்ட செயல்பாடுகள் மற்றும் நீர் நிர்வாகம் குறித்து ஆலோசிக்க, ஜன. முதல் வாரத்தில் கூட்டம் நடத்தப்படும்'' என்று கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறினார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அதிகாரிகள், கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களது கோரிக்கையை விளக்கி பேசினர்.
மாறாத கொப்பரை விலை
மவுனகுருசாமி: தேங்காய் விலை அதிகரித்தாலும், கொப்பரை விலையில் மாற்றம் இல்லை; தொடர்ந்து குறைந்து வருகிறது. நியாயமான விலை வழங்க வேண்டும். பி.ஏ.பி., உபரிநீர் திறக்கும் போது, வாளவாடி வாய்க்காலில் திறந்தால், பல்வேறு குளம், குட்டைகள் நீராதாரம் பெறும். பி.ஏ.பி., வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
கட்டாயப்படுத்தலாமா?
பழனிசாமி: அமராவதி அணையில், 84 அடி தண்ணீர் இருக்கிறது; பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன; பிப்., மாத இறுதி வரை தண்ணீர் வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும். தாராபுரம் உரக்கடைகளில், 'ஜாயின்ட்' உரம் வாங்க வேண்டுமென, கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
காட்டுப்பன்றி அட்டகாசம்
ஞானப்பிரகாசம்: உடுமலை, மலை அடிவார கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது. பன்றிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால், வெளியே வர முடியாதபடி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
கடன் தள்ளுபடி நிலுவை
ரத்தினம்: கடந்த ஆட்சி காலத்தில், தங்க நகை கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது; சிலர், கடன் தொகையை செலுத்திவிட்டனர். செலுத்தாதவர்களுக்கு தள்ளுபடி செய்தது போல், கடனை திருப்பி செலுத்தியவருக்கும் கடன் தள்ளுபடி செய்யும் நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
பி.ஏ.பி. திட்ட குளறுபடி
வேலுசாமி: வெள்ளகோவில், காங்கயம் சுற்றுப்பகுதிகளில், நெருநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கான இழப்பீடு வழங்கப்படாமல் இருக்கிறது; விரைவில் வழங்க வேண்டும். அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். பி.ஏ.பி., திட்ட குளறுபடியை சரிசெய்ய, தனியே ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
மயில்களால் இழப்பு
அப்புசாமி: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். திருப்பூர் ஒன்றியத்தில் மட்டும், 10 பெரிய குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மயில்கள் அதிகரித்துவிட்டதால், மானாவாரி பயிர் கூட செய்ய முடியவில்லை. மயில்களை கட்டுப்படுத்தும் வரை, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
புனரமைக்கப்படுமா?
பாலதண்டபாணி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. முதல்வரிடம் கோரிக்கை வைத்ததால், வல்லுனர் குழு அமைத்து, களஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும். மேலும், 5,000 ஏக்கரில் பயிரிட்டுள்ள கரும்பை, எந்த ஆலைக்கு அனுப்புவது என்றும் தமிழக அரசு தான் வழிகாட்ட வேண்டும்.
அலுவலகம் துாரம்
கிருஷ்ணசாமி: பொங்கலுார் சுற்றுப்பகுதி மக்கள், பத்திர பதிவுக்கு நெருப்பெரிச்சல் சென்றுவர வேண்டியுள்ளது. அரசு அறிவித்தபடி, விரைவாக பொங்கலுாரில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
ரூ.24 லட்சம் பாக்கி
பொன்னுசாமி: திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டுப்புழு விவசாயிகளுக்கு, 24 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது; விரைவில் வழங்க வேண்டும்.
வற்புறுத்தலாமா?
சரவணன்: தட்கல் திட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்க, தொகையை 'டிடி' எடுத்து கொடுக்க வேண்டுமென, திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்; அரசு உத்தரவுப்படி, ஆன்லைன் மூலமாக வசூல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
----
படம் 3 காலம்
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

