/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம்; திருமூர்த்தியிலிருந்து 3ம் சுற்று நீர் திறப்பு
/
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம்; திருமூர்த்தியிலிருந்து 3ம் சுற்று நீர் திறப்பு
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம்; திருமூர்த்தியிலிருந்து 3ம் சுற்று நீர் திறப்பு
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம்; திருமூர்த்தியிலிருந்து 3ம் சுற்று நீர் திறப்பு
ADDED : ஏப் 15, 2025 09:32 PM
உடுமலை; திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு இன்று அதிகாலை முதல், முழு கொள்ளளவு நீர் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஜன., 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில் நீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. தண்ணீர் திறப்பை தொடர்ந்து, பாசன பகுதிகளில், மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், முதல் சுற்று, பிப்., 24ல் நிறைவு செய்யப்பட்டது. மார்ச் 13ல், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டு, கடந்த, 10ம் தேதி நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வாயிலாக நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று அதிகாலை, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.
திருமூர்த்தி அணை நீர்மட்டம், 50 அடி உயர்ந்ததும், இரவு, 12:00 மணிக்கு மேல் நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று அதிகாலை முழு கொள்ளளவில் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், 48.66 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 821 கனஅடி நீரும், பாலாறு வழியாக, 3 கனஅடி நீர் வரத்து இருந்தது.
அணையிலிருந்து, தளி கால்வாய் வாயிலாக, வினாடிக்கு, 49 கனஅடி, குடிநீர், 21 கனஅடி, இழப்பு, 9 என, 79 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.