/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்க!
/
வாக்காளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்க!
ADDED : நவ 02, 2025 03:21 AM

பல்லடம்: கணக்கெடுப்பு பணியின் போது வாக்காளர் களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என, பல்ல டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்வது குறித்த, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் ராஜேஷ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாக்காளர் பதிவு அலுவலர் சரவணன் பேசியதாவது:
கணக்கெடுப்பின்போது, தகுதியில்லாத வாக்காளர்களை எக்காரணம் கொண்டும் சேர்த்துவிடக்கூடாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு படிவம் வீதம் இரண்டு படிவங்கள் வழங்கப்படும்.
ஒன்று வாக்காளருக்கும், மற்றொன்று கையொப்பம் பெற்று நீங்களும் வைத்துக்கொள்ள வேண்டும். வரும், 4ம் தேதியில் இருந்து கணக்கெடுப்பு பணிகளை துவக்க வேண்டும். பொதுமக்கள், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். படிவங்களை பூர்த்தி செய்ய அவர்களுக்கு தெரியவில்லை எனில், படிவங்களை பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும். கையொப்பம் பெற்ற படிவங்கள்தான் சேர்க்கப்படும். இப்பணிகளை தொடர்ந்து, ஒரு மாத காலம் வாக்காளர்களுக்கு அவகாசம் உள்ளது.
ஒவ்வொருவருக்கும், 300 - 400 வீடுகள் கணக்கெடுப்பு வரலாம். ஓட்டுச்சாவடி உதவி நிலை அலுவலர்கள் உங்களுக்கு உதவுவார்கள். படிவங்களை நீங்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும்.
உதவியாளர்களிடம் கொடுத்து விட வேண்டாம். புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கான படிவம் - 6 உங்களுக்கு வழங்கப்படும். டிச. 4ம் தேதி வரை இப்பணிகளை மேற்கொள்ள காலக்கெடு உள்ளது. இறுதி பட்டியல், 2026 பிப். 7ம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்னுமே புரியல... முன்னதாக, 'அதிகாரிகள் சொல்வது எதுவுமே புரியவில்லை என்றும்; எங்களது கருத்துக்களையும் கேட்கவில்லை,' எனவும் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், புலம்பினர்.
திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சட்டசபை தொகுதி தேர்தல் துணை தாசில்தார் அன்பரசு, ராமசாமி ஆகியோர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிகளை அளித்தனர்.

