/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடப்பாண்டு 'கை' கொடுத்த பீட்ரூட் சாகுபடி : மீண்டும் விவசாயிகள் ஆர்வம்
/
நடப்பாண்டு 'கை' கொடுத்த பீட்ரூட் சாகுபடி : மீண்டும் விவசாயிகள் ஆர்வம்
நடப்பாண்டு 'கை' கொடுத்த பீட்ரூட் சாகுபடி : மீண்டும் விவசாயிகள் ஆர்வம்
நடப்பாண்டு 'கை' கொடுத்த பீட்ரூட் சாகுபடி : மீண்டும் விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 01, 2025 12:10 AM

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பீட்ரூட்டிற்கு நல்ல விலை கிடைத்து வருவதால், மீண்டும் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், கரிசல் மற்றும் செம்மண் பூமிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 90 நாள் சாகுபடி காலமான இப்பயிர், களிமண் பகுதிகளில் செழிப்பாக வளரும். இதன் சாகுபடிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம், உரிய விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடும் விலை சரிவை சந்தித்தது.
ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்காததோடு, பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் செடியுடன் உழுதனர்.
இவ்வாறு, கடந்த சில ஆண்டுகளாகவே பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சியதால் சாகுபடி பரப்பு பாதியாக குறைந்தது.
குறைந்த கால பயிர் மற்றும் தண்ணீர் குறைவு ஆகிய காரணங்களினாலும், மாற்றுப்பயிர் சாகுபடிக்கு போதிய கால அவகாசம் இல்லாததாலும், ஒரு சில விவசாயிகள் இந்தாண்டும் பீட்ரூட் சாகுபடியை மேற்கொண்டனர்.
பருவ மழை இயல்பை விட அதிகரித்ததோடு, பீட்ரூட் விளைச்சலுக்கான சீதோஷ்ண நிலை சரியாக அமைந்ததால், தற்போது பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 10 முதல் 15 டன் வரை மகசூல் கிடைத்து வருகிறது.
பல ஆண்டுகளாக இல்லாத விலையாக, இந்தாண்டு இதன் விலை விவசாயிகளுக்கு 'கை' கொடுத்துள்ளது. தற்போது, 25 கிலோ கொண்ட ஒரு பை, 300 முதல், 400 ரூபாய் வரை விற்று வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'உடுமலை பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் பீட்ரூட் சாகுபடி துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே உரிய விலை கிடைக்காதது, நோய் பாதிப்பு, மகசூல் குறைவு ஆகிய காரணங்களால் படிப்படியாக இதன் சாகுபடி பரப்பு குறைந்து வந்தது. இந்தாண்டு பீட்ரூட் சாகுபடியில் மகசூல் திருப்தியாக அமைந்ததோடு, வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு பலனுள்ளதாக மாறியுள்ளது,' என்றனர்.

