/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வளைக்கப்படும்' வால்வுகள்; அத்திக்கடவு திட்டத்தில் சிக்கல்
/
'வளைக்கப்படும்' வால்வுகள்; அத்திக்கடவு திட்டத்தில் சிக்கல்
'வளைக்கப்படும்' வால்வுகள்; அத்திக்கடவு திட்டத்தில் சிக்கல்
'வளைக்கப்படும்' வால்வுகள்; அத்திக்கடவு திட்டத்தில் சிக்கல்
ADDED : அக் 19, 2024 12:42 AM
திருப்பூர்: 'அத்திக்கடவு திட்ட குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள வால்வுகள், விவசாயிகளால், தங்கள் வசதிக்கேற்ப திருப்பிக் கொள்ளப்படுவது தான், அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தில், சில இடங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படாமல் இருப்பதற்கான காரணம்' என கூறப்படுகிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது; ஆங்காங்கே பிரதான கிளைக் குழாய்களும் பொருத்தப்பட்டு, குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டுதலுக்கு வசதியாக, வால்வுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
பல குளம், குட்டைகளில் நீர்செறிவூட்டப்படும் நிலையில், பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு சரிவர நீர் செறிவூட்டப்படுவதில்லை என, விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
எதனால் தடைபடுகிறது நீர்?
அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது: குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட வேண்டும் என்பதற்காக, தங்கள் 'வால்வு'களை திருப்பிக் கொள்கின்றனர். இதனால், அந்த குழாய் சார்ந்த குளம், குட்டைகளுக்கு நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 'வால்வு'களை சிலர் திருடி சென்று விடுகின்றனர். திரும்ப, திரும்ப பொருத்தினாலும் அவை களவு போகின்றன; இதுவும், நீர் வினியோகம் தடைபட காரணம் என தெரிய வருகிறது. எனவே, வால்வு மற்றும் குளம், குட்டையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.