/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரணி நடராஜ் என்றொரு வாழ்நாள் சாதனையாளர்!
/
பரணி நடராஜ் என்றொரு வாழ்நாள் சாதனையாளர்!
ADDED : ஏப் 19, 2025 11:29 PM
தன் வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்கும், இந்த சமூகத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்த பரணி எம்.நடராஜ், 1958 ஜன., 10ம் தேதி திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, கணியாம்பூண்டி கிராமத்தில் முருகப்ப கவுண்டர் - மயங்காத்தாள் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தார்.
பள்ளிக் கல்வியை மட்டுமே பயின்ற அவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல், பனியன் மற்றும் பஞ்சாலை நிறு வனத்தில், 10 ஆண்டுகள் வேலை செய்தார். அந்நிறுவனத்தில் அடிக்கடி நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக பஞ்சு மில் சரிவர இயங்கவில்லை. எனவே, பரணி ஏஜென்சிஸ் எனும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கினார். அதிக இறைபக்தியை கொண்ட நடராஜ், தனது தொழிலில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை இறை செயலுக்கும், சமூக சேவைக்கும் செலவு செய்ய ஆரம்பித்தார்.
மகாபாரதத்தில் ராமருக்கு தம்பி லட்சுமணன் எப்படியோ அதே போல் இவருக்கு அண்ணன் சொல் தட்டாத தம்பியாய் இவரது உடன் பிறந்த சகோதரர் வேலுச்சாமி, அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, நடராஜ் தனது மனைவி பூங்கொடி, மீது கொண்ட அன்பாலும், பாசத்தாலும், பரிபூரண புரிதலுடன் இணைந்து, தனது வாழ்வில் ஏற்றம் கண்டார். அதுவே பின்னாளில் அவர் வாழ்நாள் சாதனையாளராக மாற வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது.
மக்களுக்கானமகத்தான சேவை
சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ செலவுக்கு உதவுதல், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள், பொருத்த உதவி செய்தல் போன்ற பணிகளை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமின்றி, மக்கள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை மருந்து வாங்க செலவிடுகிறார் என்பதை அறிந்த நடராஜ், தான் சார்ந்த மத்திய அரிமா சங்க அறக்கட்டளையின் வாயிலாக, திருப்பூரிலேயே முதன்முறையாக, 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய மருந்தகத்தை துவக்கினார்.
இதனால், லட்சக்கணக்கான பொதுமக்கள் இன்று வரை பலன் பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அரிமா சங்கம் வாயிலாக, ரத்ததான முகாம் நடத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் கொடுப்பது போன்ற ஏராளமான நற்காரியங்களை செய்துள்ளார்.
விளையாட்டுத்துறை
தனது நண்பர்களோடு இணைந்து திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையை துவங்கி, மாநில அளவிலான பல போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.
பொது சேவை
தான் வசிக்கும் 15 வேலம்பாளையம் பகுதியில், மக்கள் மற்றும் அப்பகுதி வளர்ச்சிக்காகவும், ஏராளமான நற்காரியங்களை செய்துள்ளார். முதற்கண் அங்கு வசிக்கக்கூடிய மக்களின் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும், பேணிப்பாதுகாக்க ஏறத்தாழ, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை வழங்கி அறிவுத்திருக்கோவிலை உருவாக்கியுள்ளார். இதுதவிர, 15 வேலம்பாளையம் பகுதி வளர்ச்சிக்காக அறிவு திருக்கோவில் அன்பர்களோடு இணைந்து அக் ஷயா எனும் அறக்கட்டளையை நிறுவினார்.
அறக்கட்டளையின் வாயிலாக, 15 வேலம்பாளையம் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, 18 லட்சம் ரூபாய் செலவில் அந்தப் பகுதி முழுவதும் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தினார். இதனால், குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குற்றங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்வி சேவை
தான் பள்ளிக் கல்வியை தாண்ட முடியாவிட்டாலும், அனைவரும் மேல்நிலைக் கல்வியையும், உயர் கல்வியையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 15 வேலம்பாளையம் பகுதி குழந்தைகள், தங்களின் மேல்நிலைக் கல்விக்காக அங்கேரிபாளையம் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கஷ்டப்படுவதை எண்ணி, மிகுந்த சிரமத்திற்கு இடையே அரசிடம் போராடி, தங்கள் பகுதியிலேயே மேல்நிலைப் பள்ளியை கொண்டு வந்தார். அதற்காக, ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தை பெற்று பள்ளி அமைய காரணமாக இருந்தார்.
சமூக ஆர்வலர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரது பங்களிப்போடு அந்த மேல்நிலைப் பள்ளியில், 33 வகுப்பறைகளை, 1.5 கோடி ரூபாய் செலவில் நன்கொடையாளர்கள் துணை கொண்டு கட்டிக் கொடுத்தார். இன்று அந்தப்பள்ளியில், 1,215 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்பாலச்சந்தர், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று இந்திய ஆட்சிப் பணியில் திறம்பட செயலாற்றி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் அதே பகுதியில் இயங்கி வரும் நுாற்றாண்டு விழா கண்ட துவக்கப்பள்ளியில் உலக தரத்திலான கல்வியை வழங்க வேண்டும் என்றெண்ணி, அக் ஷயா அறக்கட்டளை வாயிலாக, 80 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில், அனைத்து வசதிகளும் கொண்ட தொடு திரையுடன் கூடிய குளிர்சாதனம் பொருத்தப்பட்ட எட்டு மெய்நிகர் வகுப்புகளை (Smart Class) அமைத்துள்ளார். இதனால், உலக தரத்திலான கல்வியை அந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அப்பள்ளியில், அக் ஷயா அறக்கட்டளை வாயிலாக, கழிவறைகளை கட்டிக் கொடுத்து, இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாதனைகளை அறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கு வருகை புரிந்து ஆய்வு செய்து தனது முகநுாலில் அனைவரையும் பாராட்டினார்.
தமிழக முதல்வர் அறிவித்துள்ள நம்ம ஊர் - நம்ம பள்ளி திட்டத்தில் இந்தப் பள்ளியானது ஒரு எடுத்துக்காட்டு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கத்தால் ஆவணப்படம் எடுத்துள்ளார்கள். தமிழக அளவில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட நடுநிலைப்பள்ளி எனும் பெருமையை இப்பள்ளி பெற்றுள்ளது. தற்போது, 1,550 மாணவர்கள் பயில்கின்றனர்.
மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவராகவும், அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளி வளர்ச்சி குழு தலைவராகவும் இருந்து இந்த இரு பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது உட்பட ஏராளமான நற்காரியங்களை செய்துள்ளார்.
கொரோனா கால சேவை
கொரோனா காலத்தில் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அந்நேரத்தில் பாமர மக்களுக்கும் மருத்துவ சேவை எட்டாக்கனியாக இருந்தது. அதை மாற்ற நினைத்த பரணி நடராஜ்,அக் ஷயா அறக்கட்டளை மற்றும் தனது நண்பர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை, 80 லட்சம் ரூபாய் செலவில், 200 படுக்கையுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றினார். இதில், 1,350க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர்.
பேரிடர் கால சேவை
கஜா புயல் தாக்கத்தின்போது புயல் தாக்கப்பட்ட, 48 மணி நேரத்திற்குள் வெள்ளபள்ளம் கிராமத்துக்கு சென்று ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிக குடில் அமைத்துக் கொடுத்து, உணவுப் பொருட்களை சமூக சேவகர் இன்ஸ்பயரிங் ரேவதியின் துணை கொண்டு வழங்கினார்.
ஆன்மிக சேவை
தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட பரணி நடராஜ், திருப்பூர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைப்பு செய்து தானே முன் நின்று கும்பாபிேஷகம் நடத்தி உள்ளார். கோவில்களை பொருத்தமட்டில் என்ன வசதிகள் தேவைப்படுகிறதோ அதனை சிறிதும் தயக்கம் இன்றி நிறைவேற்றி உள்ளார்.இதுதவிர, ஆன்மிக அன்பர்களோடு இணைந்து கணியாம்பூண்டியில், SKM எனும் திருமண மண்டபத்தை கட்டி, குறைந்த கட்டணத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற வழிவகை செய்துள்ளார்.
'வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,' என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பரணி நடராஜ், கடந்த, 17.04.2025ம் தேதி இந்த மண்ணுலக வாழ்வைத்துறந்து, 15 வேலம்பாளையம் பகுதி மக்கள் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தி, இறைவனடியில் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆன்மா சாந்தி பெற்று இறைவனோடு இணைந்து, வழிநடத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுதல்.

