/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டில்லியில் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி; திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன
/
டில்லியில் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி; திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன
டில்லியில் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி; திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன
டில்லியில் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி; திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன
ADDED : பிப் 08, 2025 06:50 AM
திருப்பூர்; திருப்பூரின், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை காட்சிப்படுத்தும் வகையில், 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சியில், 40 முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் 11 வகை தொழில் மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டு முயற்சியால், டில்லியில் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி, கடந்தாண்டு நடத்தப்பட்டது.
இதில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மரம் வளர்ப்பு, மறுசுழற்சியுடன் கூடிய மறுபயன்பாடு, காற்றாலை மின்சக்தி உற்பத்தி என, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வரும் 14ல் துவங்கி, 17 ம் தேதி வரை, நான்கு நாட்கள், 'பாரத் டெக்ஸ் - 2025' சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாடு நடக்கிறது. கண்காட்சியில் மத்திய ஜவுளித்துறையின், 11 கவுன்சில்களுக்கு தனித்தனியே அரங்கு அமைக்கப்படுகிறது.
மொத்தம் 3 ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சியைப் பார்வையிட 120 நாடுகளை சேர்ந்த, 6,000க்கும் அதிகமான வர்த்தகர்கள், முன்பதிவு செய்துள்ளனர். சர்வதேச அளவிலான தொழில்நுட்ப வல்லுனர்கள் 100 பேர், 70 கருத்தரங்குகளில் பேசுகின்றனர்.
சமீபத்தில் திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமி ராவ், முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, திருப்பூரில் உள்ள, 40 முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த முறை கண்காட்சியில், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டது; இதனால், ஆர்டர்கள் அதிகரித்தன.
தற்போது 2வது கண்காட்சியில் பங்கேற்க உள்ள திருப்பூரை சேர்ந்த, 40 முன்னணி ஏற்றுமதி நிறுவனத்தினர், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி படிநிலைகளை காட்சிப்படுத்தி, புதிய வர்த்தகர்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்; அதற்காக முன்கூட்டியே, டில்லி விரைந்துள்ளனர்,' என்றனர்.