/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவர்னரிடம் மனு அளிக்க பா.ஜ., திட்டம்
/
கவர்னரிடம் மனு அளிக்க பா.ஜ., திட்டம்
ADDED : பிப் 07, 2025 06:54 AM
திருப்பூர்; பல்லடம் அருகே, மூன்று பேர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தி, தமிழக கவர்னரிடம் 50 ஆயிரம் பேரின் கையெழுத்துகளுடன் மனு அளிக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு, நவ., 29ல் திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, 78, இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோரை, பண்ணை வீட்டில், ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இரு மாதங்களை கடந்தும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.
கடந்த மாதம் பா.ஜ.,வினர் மற்றும் விவசாயிகள் சார்பில், கொலையில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்காத போலீசார் மற்றும் தி.மு. க., அரசை கண்டித்து கொடுவாயில் போராட்டம் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்ய, மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். அண்ணாமலை முதல் கையெழுத்திட்டார்.
பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் கூறுகையில், ''இதுவரை, 30 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இன்னமும், 20 ஆயிரம் கையெழுத்து பெறப்பட உள்ளது. மொத்தம் 50 ஆயிரம் கையெழுத்துகளைப் பெற்றவுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று, தமிழக கவர்னரிடம் மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

