ADDED : நவ 26, 2024 11:47 PM

திருப்பூர்; ஆண்டிபாளையம் குளக் கரையில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் நேற்று திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
திருப்பூர் - மங்கலம் ரோட்டிலுள்ள ஆண்டிபாளையம் குளத்தில், சுற்றுலா துறை சார்பில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்லம் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார். முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, படகு இல்லத்தை திறந்துவைத்தார்.
போலீஸ் கமிஷனர் லட்சுமி, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், சுற்றுலா நிறுவனத்தினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
குளத்தில் சவாரி செய்ய எட்டு பேர் பயணிக்கும்வகையில் 2 மோட்டார் படகு, 3 துடுப்பு படகு; 8 பெடல் படகு என, மொத்தம் 13 படகுகள் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்புக்காக, லைப் ஜாக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன; மீட்பு படகுகள், நீச்சல் வீரர்களும் உள்ளனர். படகு இல்ல முகப்பு பகுதியில், துாரி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா. படகு இல்ல அலுவலகத்தின் மேல் தளத்தில், குளத்தின் அழகு மற்றும் படகு சவாரியை ரசித்தபடியே சாப்பிடும் வகையில் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.
படகு இல்லத்துக்கு வரும் மக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படகு இல்லம் திறக்கப்பட்டதால், நேற்று முதலே படகு சவாரிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டணம் எவ்வளவு?
படகு இல்லத்துக்கு நுழைவு கட்டணம் ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. படகு சவாரிக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் கூடிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி உள்பட, மோட்டார் படகில் 20 நிமிட சவாரிக்கு நபருக்கு, 100 ரூபாய்; 4 இருக்கை பெடல் படகு மற்றும் 5 இருக்கை துடுப்பு படகுகளில், 30 நிமிட சவாரிக்கு, நபருக்கு 100 ரூபாய்; 2 இருக்கை பெடல் படகில், 30 நிமிட சவாரிக்கு, 150 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழு இயற்கை சூழலில்...
மொத்தம், 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆண்டிபாளையம் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. குளத்தின் நடுவே அமைந்துள்ள திட்டில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சுற்றுலா துறை சார்பில் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம், திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கும் திருப்பூர் மக்களுக்கு, இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆண்டிபாளையம் படகு இல்லம், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும். படகு இல்லம், தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும். பிறந்தநாள், திருமண நாள் உட்பட குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் படகு இல்லத்தில் ஏற்பாடு செய்து தரப்படும் என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- அரவிந்த் குமார்
மாவட்ட சுற்றுலா அலுவலர்