/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீறிப்பாய்ந்த படகுகள்; களைகட்டிய காவிலிபாளையம் குளம்
/
சீறிப்பாய்ந்த படகுகள்; களைகட்டிய காவிலிபாளையம் குளம்
சீறிப்பாய்ந்த படகுகள்; களைகட்டிய காவிலிபாளையம் குளம்
சீறிப்பாய்ந்த படகுகள்; களைகட்டிய காவிலிபாளையம் குளம்
ADDED : ஆக 23, 2025 12:22 AM

தி ருப்பூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது காவிலிபாளையம்; ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி; இங்கு, 480 ஏக்கர் பரப்பில் குளம் அமைந்திருக்கிறது.
கோவை, அவிநாசி வழியாக நீர் நிலைகளில் வழிந்தோடி வரும் நீர், இக்குளத்தை நிரப்புகிறது. அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழும், இக்குளத்தில் நீர் செறிவூட்டப்படுகிறது. இக்குளத்தில் நீர் விளையாட்டு நடத்த, காவிலிபாளையம் படகு மற்றும் மீனவர் நலச் சங்கம் முயற்சி எடுக்க, ஈரோடு மாவட்ட படகு மற்றும் நீர் விளையாட்டு சங்கம் ஒத்துழைப்பு வழங்கியது. விளைவாக, தமிழக கயக்கிங் மற்றும் கேனோயிங் சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 2025ம் ஆண்டுக்கான மாநில அளவிலான கேனோ படகு போட்டி, கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஒளிரும் ஈரோடு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். 11 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை விளையாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், திருவிடைமருதுார், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற போட்டி யாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், தமிழகத்தின் சார்பில் தேசிய அளவில், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெறுவர்.
ஈரோடு மாவட்ட படகு மற்றும் நீர் விளையாட்டு சங்க செயலாளர் டாக்டர் பிரபு கூறியதாவது; மாவட்ட நிர்வாக அனுமதியுடன், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒத்துழைப்புடன் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் முறையாக மேற்கு தமிழகத்தில், நீர் விளையாட்டு நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும், ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு போட்டி நடத்த, காவிலி பாளையம் படகு மற்றும் மீனவர் நலச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தேசிய அளவில், இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'தமிழக நீர் விளையாட்டுக்கான சென்டர்' என்ற நிலைக்கு இப்பகுதியை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களை தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டி களுக்கு தயார்படுத்த பயிற்சி வழங்குவதும் முக்கிய நோக்கம். வேலை வாய்ப்பில் இந்த விளையாட்டுக்கென இட ஒதுக்கீடு இருப்பதால் காவல் துறை, தீயணைப்புத்துறை, ரயில்வே, இந்திய பாதுகாப்புப்படை போன்ற துறைகளில் வேலை வாய்ப்பும் எளிதாகும்.
இதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.