ADDED : ஆக 15, 2025 11:55 PM

ப ல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.
முன்னதாக, செம்மிபாளையம் கிராமத்தில், இருதரப்பினர் பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒரு தரப்பை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த மற்றொரு தரப்பினர், நேற்று நடந்த கிராமசபா கூட்டத்தில் பங்கேற்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புண்ணியமூர்த்தி, திருமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலர் பிரபு ஆகியோரை சுற்றி வளைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போலீசார் செய்வதறியாமல் திணறினார். இறுதியாக, வேறு வழியின்றி, அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஊராட்சி அலுவலக மெயின் கேட்டை பூட்டினர். கிராமசபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை. நீண்ட நேரத்துக்கு பின், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
சுட்டிக்காட்டிய 'தினமலர்'சுதாரிக்காத அதிகாரிகள் இருதரப்பு பட்டா பிரச்னை காரணமாக, செம்மிபாளையம் கிராமத்தில் அசாதாரண சூழல் உள்ளதாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், மாவட்ட நிர்வாகம், இதற்கு தீர்வு காண வேண்டும் என்று 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டி இருந்தது. அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததன் விளைவு, நேற்றைய கிராம சபை கூட்டத்தில் எதிரொலித்தது.