/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை மர வேரில் 'விஷ மருந்து' விவசாயிகளை ஏமாற்றும் புரோக்கர்கள்
/
தென்னை மர வேரில் 'விஷ மருந்து' விவசாயிகளை ஏமாற்றும் புரோக்கர்கள்
தென்னை மர வேரில் 'விஷ மருந்து' விவசாயிகளை ஏமாற்றும் புரோக்கர்கள்
தென்னை மர வேரில் 'விஷ மருந்து' விவசாயிகளை ஏமாற்றும் புரோக்கர்கள்
ADDED : ஏப் 21, 2025 04:51 AM
பொங்கலுார் : வேரில் விஷ மருந்து கட்டினால் தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் என்று கூறி புரோக்கர்கள் விவசாயிகளை ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் உயிருக்கே உலை வைத்து விடும் அபாயம் உள்ளது.
இந்தாண்டு வரலாறு காணாத அளவு தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி, வறட்சியால் அதிகரித்த பூச்சி தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தேங்காய் வரத்து பெரிதும் குறைந்து விட்டது. இதனால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை சில புரோக்கர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
தென்னை மர வேரில் விஷ மருந்துகளை கட்டினால் பூச்சி தாக்குதல் குறையும் என்று விவசாயிகளை நம்ப வைத்து பணம் பறிக்கின்றனர். அப்பாவி விவசாயிகளும் புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். அவர்கள் அதிக வீரியம் மிக்க, கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை வேரில் கட்டுகின்றனர்.
வேரில் விஷம் வைத்த தேங்காய் மற்றும் இளநீரை உண்ணும் பொது மக்கள் உடலிலும் விஷம் கலந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வேரில் விஷ மருந்து கட்டும் புரோக்கர்களை கட்டுப்படுத்த தவறினால், தேங்காய், இளநீரை பயன்படுத்தும் பொது மக்களின் உயிருக்கே உலை வைத்து விடும் அபாயம் உள்ளது.
வேளாண் துறையினர் கூறுகையில், ''பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை தோப்பு களில் விடலாம். மரத்தைச் சுற்றி மஞ்சள் நிற தார்பாலின் சீட்டுகளை கட்டி விளக்கெண்ணெய் தடவினால் பூச்சிகள் அதில் ஒட்டி இறந்து விடும். மரங்களுக்கு இரண்டு கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு வைக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு வேளாண் துறையினர் பரிந்துரைக்கும் டானிக் கட்டலாம். எக்காரணம் கொண்டும் வேரில் விஷ மருந்துகளை கட்டக் கூடாது' என்றனர்.