/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி காலம் முடிந்தும் இழுபறி; எப்ப தான் திறப்பீங்க?
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி காலம் முடிந்தும் இழுபறி; எப்ப தான் திறப்பீங்க?
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி காலம் முடிந்தும் இழுபறி; எப்ப தான் திறப்பீங்க?
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி காலம் முடிந்தும் இழுபறி; எப்ப தான் திறப்பீங்க?
ADDED : நவ 24, 2024 11:19 PM

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி, திட்ட காலம் முடிந்தும் ஆண்டுக்கணக்கில் இழுபறியாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதித்து வரும் நிலையில், நகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் வந்து செல்கின்றன.
இங்கு, தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்பதற்கான 'ரேக்' மற்றும் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை.
போதிய வசதியில்லாத இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், 5 ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா, சிறப்பு நிதியின் கீழ், ரூ.4 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்கியது.
இத்திட்டத்தின் கீழ், 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், வணிக வளாகம், அலுவலக அறைகள், நேரக்காப்பாளர் அறை, பயணியர் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக பஸ் ஸ்டாண்ட் வடிவமைக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் 'ஆமை' வேகத்தில் நடந்து வந்த நிலையில், கடந்தாண்டு, சுற்றுச்சுவர், நுழைவாயில் ஆர்ச் என பெரும்பாலான பணிகள் முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் வகையில், நகராட்சி சார்பில், வணிக வளாக கடைகள், அலுவலக அறைகள் ஏலம் விடப்பட்டது. ஆனால், பணிகளை முழுமையாக முடிக்காமல், தொடர்ந்து இழுபறியாகி வருகிறது.
ஒன்றரை ஆண்டு திட்ட காலமாக கொண்டு துவங்கிய பணி, 5 ஆண்டாகியும் முடியாமல், அரசு ஒதுக்கிய நிதி வீணாகி வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில், பஸ்கள், பயணியர் நெருக்கடியை சந்தித்து வருவதோடு, புதிய விரிவாக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் வாயிலாக, நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணியை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரிவான திட்டமிடல் அவசியம்
உடுமலையில் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிற்கும், விரிவாக்கம் செய்யப்படும் பஸ் ஸ்டாண்டிற்கும், இடையில், பைபாஸ் ரோட்டிலிருந்து, பழநி ரோட்டை இணைக்கும் பிரதான வழித்தடம் மற்றும் ரவுண்டானா உள்ளது.
விரிவாக்கப்படும் பஸ் ஸ்டாண்டில், பழநி, கோவை பஸ்கள் மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டால், பஸ் ஸ்டாண்டிலிருந்து, புதிதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டிற்கு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த, வளைவு ரோட்டை பயணியர் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, விரிவாக்கம் செய்யப்படும் பஸ் ஸ்டாண்டிற்கு, பொதுமக்கள் எளிதாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் வகையில், கீழ்ப்பாலம் கட்ட வேண்டும் அல்லது, தற்போதுள்ள பைபாஸ் ரோட்டை, ஐஸ்வர்யா நகர், காந்திநகர், அண்ணா குடியிருப்பு வழியாக பழநி ரோட்டை இணைக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு, பயணியருக்கு பாதிப்பு இல்லாமலும், வழித்தடங்கள் மற்றும் மக்கள் எளிதாக கடக்கும் வகையில், அரசுத்துறை அதிகாரிகள் விரிவாக கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.