/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்கள்; மாற்றம் இல்லாத மடத்துக்குளம்
/
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்கள்; மாற்றம் இல்லாத மடத்துக்குளம்
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்கள்; மாற்றம் இல்லாத மடத்துக்குளம்
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்கள்; மாற்றம் இல்லாத மடத்துக்குளம்
ADDED : டிச 11, 2024 10:42 PM
உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் சென்று திரும்பவும், போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் வழியாக, நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலைதுார மப்ஸல் மட்டுமல்லாது, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து பழநிக்கு இயக்கப்படும் பஸ்களும், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் வருவதில்லை.
அனைத்து தொலைதுார பஸ்களும், பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணியரை ஏற்றிச்செல்கின்றன. இதனால், நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.
பஸ் ஸ்டாண்டுக்குள் தொலைதுார பஸ்கள் செல்லாததால், பயணியரும், நெடுஞ்சாலையிலேயே நிற்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் பயணியர், பஸ் நடமாட்டம் இல்லாமல், எப்போதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில், அவ்வப்போது, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், சில நாட்களிலேயே இந்த நடைமுறை கைவிடப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் மப்ஸல் பஸ்கள், மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லவும், எளிதாக திரும்பவும், இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பஸ்கள், நால்ரோடு சந்திப்புக்கு செல்லும் ரோடு குறுகலாக இருப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. இது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் மற்றும் இதர பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காலியிடம், திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டுமிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் தஞ்சமடையாமல் இருக்க கண்காணிப்பு செய்ய வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் பகுதியான மடத்துக்குளத்தில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்ட்டை விரிவாக்கம் செய்து, தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்பெறுவார்கள்.